நாடு இன்னும் அவசர நிலையில் இருக்கும்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில், பிரதமர் முஹைதீன் யாசின் தனக்கான ஆதரவை அதிகரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் கூட்டி வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பரில், முஹைதீன் 111 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் – மக்களவையில் பெரும்பான்மையைப் பெறத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கை – 2021 வரவிசெலவு திட்டத்தை நிறைவேற்றினார்.
பதிவைப் பொறுத்தவரை, பதவியில் இருந்தவர்கள் இருவரின் மரணத்தைத் தொடர்ந்து இரண்டு நாடாளுமன்ற இடங்கள் காலியாக உள்ளன.
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் ஆதரவளித்த போதிலும், குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினர் தெங்கு ரஸலீ ஹம்ஸா, முஹைதீனை ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாகக் கூறினார்.
கு லி`யைத் தொடர்ந்து, பாடாங் ரெங்காஸ் மற்றும் மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது ஆதரவைத் திரும்பப் பெற்றனர், இதனால் முஹைதீன் தனது பெரும்பான்மையை இழக்க நேரிட்டது.
அதைத் தொடர்ந்து, மொத்தம் 220 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து, 109 பிரதிநிதிகளின் ஆதரவை மட்டுமே முஹைதீன் பெற்றார்.
இருப்பினும், நேற்று, தெப்ராவ் எம்.பி. ஸ்டீவன் சோங் மற்றும் ஜுலாவ் எம்.பி. லாரி சங் ஆகியோர் முஹைதீனுக்கு ஆதரவாக பி.கே.ஆரை விட்டு வெளியேறினர்.
111 எம்.பி.க்களின் ஆதரவைப் பிரதமர் திருப்பப் பெற்றார்.
எவ்வாறாயினும், ஒரு சில அம்னோ எம்.பி.க்களின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மெலிதான பெரும்பான்மை நடுங்கிக்க்கொண்டுதான் உள்ளது, அவர்கள் முஹைதீனுடன் இருந்தாலும், பெர்சத்து தலைவரை விமர்சிக்கும் அறிக்கைகளை அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர்.
சில அம்னோ எம்.பி.க்களின் ஒதுக்கீட்டை RM3.7 மில்லியனிலிருந்து RM100,000 ஆக குறைக்க முஹைதீன் செயல்பட்டார்.
முஹைதீனுக்கான ஆதரவை மீட்டுக்கொணட நஸ்ரி (பாடாங் ரெங்காஸ்) மற்றும் ஜஸ்லான் (மாச்சாங்) தவிர்த்து, ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்ட மற்ற எம்.பி.க்கள் நஜிப் ரசாக் (பெக்கான்), அஹ்மத் ஜாஹித் ஹமிடி (பாகான் டத்தோ) மற்றும் அஹ்மத் மஸ்லான் (பொந்தியான்) ஆவர்.
நஜிப், ஜாஹித் மற்றும் அஹ்மத் ஆகியோர் முஹைதீனுக்கான ஆதரவை வெளிப்படையாக திரும்பப் பெறவில்லை, அவர்கள் அவ்வாறு செய்தால், அது பிரதமரின் மெலிதானப் பெரும்பான்மையை மேலும் மோசமாக்கிவிடும்.
முஹைதீனின் கூட்டாளிகள் இப்போது பிரதமரை ஆதரிப்பதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்களை ஈர்க்க முயற்சிக்கிறார்கள் என்றும், இன்னும் பலரும் சேரலாம் என்றும் மலேசியாகினிக்குத் தகவல் கிடைத்தது.
முஹைதீனுக்கு மெலிதான பெரும்பான்மை இருந்தாலும், பிளவுபட்ட எதிர்க்கட்சி சூழ்நிலையால் அவருக்கு ‘உதவிகள்’ செய்யப்படுகின்றன.
பி.கே.ஆரில் இருந்து இரண்டு பிரதிநிதிகள் கட்சியை விட்டு வெளியேறியதால், பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) இப்போது 89 நாடாளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது.
பதிவு செய்யப்படாதக் கட்சியான பெஜுவாங் மற்றும் முடா இரண்டுடன், சரவாக் பெர்சத்து கட்சி (பி.எஸ்.பி), வாரிசான், பெர்துபோஹான் புரோகிரெசிஃப் கினாபாலு பெர்சத்து (உப்கோ) மற்றும் பெபாஸ் ஆகியவற்றைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ளனர்.
முன்னதாக, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் அம்னோவைச் சேர்ந்த சிலர் பேரரசருக்கு ஜனவரி 11-ம் தேதி, அவசரநிலை அறிவிப்பு காரணமாக இடைநீக்கம் செய்யப்பட்ட மக்களவையை மீண்டும் தொடங்க வேண்டுமென வலியுறுத்தி மனு ஒன்றை அனுப்பியிருந்தனர்.
முஹைதீன் அவ்வாறு செய்ய விரும்பினால், அதைச் செய்யுமாறு அகோங் உத்தரவிட்டார்.
இது தவிர, அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக, கட்சி தாவிய இரண்டு பி.கே.ஆர். எம்.பி.க்களின் நடவடிக்கையையும் நஜிப் சாதகமானதாகக் கண்டுள்ளார்.
“இது உண்மையில் நாட்டிற்கு ஒரு நல்ல செய்தி, ஆனால் அவசரக் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டுவது அரசாங்கத்தின் சரியான நடவடிக்கைதானா என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
“ஆனால், இது நாட்டின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க நாடாளுமன்றம் மீண்டும் நடைபெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்,” என்று அவர் விளக்கினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில் வெற்றி பெற்றால், மக்களவை அமர்வைப் பிரதமர் மிகவும் வசதியாக அமல்படுத்துவார்.
அவசரகாலத்தில், அவசரகால அரசாங்கம் நாடாளுமன்ற பெரும்பான்மையைச் சார்ந்து இல்லாததால், நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட்டினாலும் எதிர்க்கட்சி முஹைதீனைத் தூக்கியெறிய வாய்ப்பில்லை.
எவ்வாறாயினும், மக்களவையில் மெலிதான பெரும்பான்மையைப் பெறுவதன் மூலம், முஹைதீன் தனது தலைமையை முன்னிலைப்படுத்தவும், நாடாளுமன்றம் பின்னர் அமர அனுமதிக்கப்பட்டால் அவரை அகற்றுவதற்கான அனைத்து எதிர்க்கட்சி முயற்சிகளையும் தடுக்கவும் இது உதவும்.
அவசரநிலை அறிவிப்பு ஆகஸ்டில் காலாவதியாகும். கோவிட் -19 தொற்றுநோய் தணிந்த பின்னர், பொதுத் தேர்தலை நடத்துவதாக முஹைதீன் உறுதியளித்துள்ளார்.