இன்று நாடு முழுவதும், கோவிட்-19 தொற்றுநோயால் மூடப்பட்ட தொடக்கப் பள்ளிகளில் பாலர், ஆண்டு ஒன்று மற்றும் இரண்டு மாணவர்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் சீருடை இல்லாத மாணவர்களுக்கு, கல்வி அமைச்சு பள்ளிக்குச் சாதாரண ஆடைகளை அணிய அனுமதித்துள்ளது, இந்த அனுமதி மார்ச் 26 வரை (முதல் கால விடுப்பு தொடங்கும் போது) தொடரும்.
கடந்த ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி முதல், நாடு முழுவதும் மூடப்பட்ட பின்னர் நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள் மீண்டும் திறக்கப்பட்டன, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய விதிமுறைகள் மற்றும் செந்தர இயங்குதல் நடைமுறைகளைச் (எஸ்.ஓ.பி) மீண்டும் சரிசெய்தனர்.
எஸ்.ஓ.பி. அம்சத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாமல், கல்வி அமைச்சு மீண்டும் திறப்பு மேலாண்மை வழிகாட்டுதல்களையும் பள்ளி வாசலில் மாணவர் இருப்பு கட்டுப்பாட்டு மாதிரிகளையும் நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விநியோகித்துள்ளது.
தொடக்கப் பள்ளிகளைத் தவிர, தொழிற்கல்வி கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்கள் பள்ளி அமர்வை மார்ச் 8-ஆம் தேதி தொடங்குவார்கள், இடைநிலைப் பள்ளி ஏப்ரல் 4-ஆம் தேதியும் (ஜொகூர், கெடா, கிளாந்தான் மற்றும் திரெங்கானு) மற்றும் ஏப்ரல் 5-ஆம் தேதி பிற மாநிலங்களிலும் தொடங்கும்.
சர்வதேசப் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் மார்ச் 8-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும்.
இருப்பினும், சரவாக், குச்சிங், சமரஹான், ஜுலாவ், மெரடோங், சிபு, கபிட், பிந்துலு, சுபிஸ் மற்றும் மிரி மாவட்டங்களில் நேருக்கு நேர் பள்ளி அமர்வுகள், கோவிட்-19 தொற்று சூழ்நிலைக் காரணமாக மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
கோவிட்-19 தொற்றுநோய் நிலைமை மலேசியாவில் தணிந்திருக்கவில்லை என்றாலும், இன்னும் சில மாநிலங்கள் இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையை (பி.கே.பி.) அமல்படுத்திக் கொண்டிருக்கின்றன என்றாலும், பாதுகாப்பான சூழலில் கல்வி அணுகலுக்கானத் தேவையைச் சமநிலைப்படுத்த பள்ளிகளை மீண்டும் திறப்பது அவசியமாகக் காணப்படுகிறது.
– பெர்னாமா