‘நான் 55 நாட்கள் விடுப்பில், நியூசிலாந்து வந்துள்ளேன்’

கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர், எட்மண்ட் சந்தாரா குமார் நியூசிலாந்தில் இருப்பது குறித்து விளக்கமளிக்க முன்வந்தார்.

அவர் அமைச்சர் மூலம், 55 நாள் பணி விடுப்புக்கு விண்ணப்பித்து, டிசம்பர் 3-ம் தேதி பிரதமரின் ஒப்புதலைப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு நடைமுறையும் பின்பற்றப்பட்டு, அனைத்து ஒப்புதல்களும் பெறப்படுவதை உறுதிசெய்த பிறகு, 2020 டிசம்பர் 23-ம் தேதி, வெளிநாடுகளில் எனது கூட்டங்களில் கலந்துகொண்ட பிறகு, டிசம்பர் 24, 2020 முதல் 9 ஜனவரி 2021 வரை நியூசிலாந்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டேன்.

“நியூசிலாந்தில் உள்ள என் குழந்தைகளைக், குறிப்பாக சட்டம் படிக்கும் என் மகனைப் பார்க்க வெளிநாடு செல்வதே எனது நோக்கம். கூடுதலாக, ஒரு பொறுப்பான தந்தையாக நான் எனது ஒன்பது வயது மகனைச் சந்திக்க வேண்டும், கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து.

“கூடுதலாக, உடல்நலப் பிரச்சினைகள் உள்ள என் மனைவியையும் நான் சந்திக்க வேண்டும். அதுமட்டுமின்றி, என் ஒன்பது வயது மகனின் புனித ஒற்றுமையைப் பெறுவதற்கான விழாவில்கூட என்னால் கலந்துகொள்ள முடியவில்லை, ஏனெனில் நான் எப்போதும் ஒரு துணை அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் எனது கடமைகளில் எப்போதும் ஓய்வில்லாமல் இருக்கிறேன்,” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் இன்று கூறினார்.

முன்னதாக, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் சந்தாரா நாட்டில் இல்லை என்று கூறப்படும் ஊடக அறிக்கைகளைத் தொடர்ந்து, சந்தாராவின் விளக்கத்தைக் கேட்டிருந்தார்.

கூட்டரசுப் பிரதேசத் துணையமைச்சர் மற்றும் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தனது கடமைகள் மற்றும் பொறுப்புகளில் எப்போதும் அர்ப்பணிப்புடன், மக்களின் நலனை உறுதி செய்வதில் முன்னுரிமை அளித்து வருவதாகவும் சந்தாரா கூறினார்.

உண்மையில், மக்களவை அமர்வில் அவர் 100 விழுக்காடு வருகை அளித்துள்ளதாகவும், 2020 டிசம்பர் 22-ல், வரவுசெலவு வழங்கல் மசோதா 2021 மீதான விவாதத்தை முடிக்க மக்களவையில் கலந்துகொண்டதாகவும் அவர் விளக்கினார்.

“அதுமட்டுமின்றி, மார்ச் 10, 2020 முதல் துணை அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர், நான் ஒருபோதும் விடுப்புக்கு விண்ணப்பிக்கவில்லை, அல்லது அந்தக் காலகட்டத்தில் நோய்வாய்ப்பட்ட விடுப்பும் பெறவில்லை.

“2020-ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது, கோவிட் -19 தொற்றுநோய் தொடர்பான அனைத்து பிரச்சனைகளிலும் கூட்டரசுப் பிரதேசம் மட்டுமின்றி, செகாமாட்டில் உள்ள மக்கள் பிரச்சினைகளைக் கையாள்வதில், நான் எப்போதும் சிறந்த சேவையை வழங்கி வந்துள்ளேன்,” என்று கூறிய சந்தாரா, அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

சந்தாரா, ஒரு துணையமைச்சராகவும் எம்.பி.யாகவும், அவர் தனது நியமனத்திற்கான ஒவ்வொரு அறிவுறுத்தலையும் விதிகளையும் எப்போதும் ஆதரிப்பதோடு, அனைத்து செயல்முறைகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுவதாகக் கூறினார்.

“அதுமட்டுமின்றி, எனது கூடுதல் விடுப்புகளுக்கு, ஊதியம் பெறா விடுப்புக்கு ஒப்புதல் கிடைத்தது,” என்று கூறிய அவர், வெளிநாட்டு பயணத்திற்கு மலேசிய குடிநுழைவுத் துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்றார்.