மலேசியாகினிக்கு எதிரான ஃபெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்த தனது அறிக்கையின் விசாரணையை விரைவுபடுத்தியதன் மூலம், காவல்துறை தன்னை மிரட்டியதாக சார்லஸ் சந்தியாகோ கூறினார்.
இது அரசாங்க அரசியல்வாதிகளை உள்ளடக்கியிருந்தால், காவல்துறையின் விசாரணை இவ்வளவு வேகமாக இருந்திருக்காது என அந்த டிஏபி எம்.பி. மேலும் சொன்னார்.
.”இது மிரட்டல். உண்மை என்னவென்றால், நீங்கள் (பொலிஸ்) பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) எம்.பி.க்கள் மீது விரைவாக விசாரணையை மேற்கொள்கிறீர்கள், ஆனால் அரசாங்கத்தின் எம்.பி.க்களிடம் இதைச் செய்யவில்லை.
“அமைச்சர்கள் எஸ்ஓபி-ஐ (கோவிட் -19) மீறியுள்ளனர். பல தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன, ஆனால் பல மாதங்களாக விசாரணை முடிக்கப்படவில்லை.
“என் விஷயத்தில், நீங்கள் எட்டு நாட்களில், எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய (கெடாவில் இருந்து) வந்தீர்கள். அது நியாயமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நீங்கள் விசாரிக்க விரும்பினால், அனைவரையும் விசாரியுங்கள் (அதே வழியில்),” என்று அவர் மேலும் கூறினார்.
முன்னதாக, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர், கோலாலம்பூர், புக்கிட் அமான் போலிஸ் தலைமையகத்தில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கெடாவைச் சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரியால் விசாரிக்கப்பட்டார்.
ஃபெடரல் நீதிமன்றத் தீர்ப்பு குறித்து. பிப்ரவரி 21-ம் தேதி சார்லஸ் மற்றும் மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் வெளியிட்ட கருத்துகளுக்கு எதிராக, சுங்கை பெட்டாணியில் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் அளித்த புகார் தொடர்பானது விசாரணை அது.
இந்தச் செய்தியை எழுதும்போது, காவல்துறை கானின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டிருக்கிறது.
அவரிடம் 12 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், ஆனால் அந்தப் புகாரைச் செய்த தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் பெயரை வெளியிட அந்த அதிகாரி மறுத்துவிட்டதாகவும் சார்லஸ் சொன்னார்.
“இது ஒரு நட்புமுறையிலான சந்திப்பு, ஆனால் விசாரணை என்பது தவறானது.
“ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் புகார் அளித்ததால், நீங்கள் (போலிஸ்) எனக்கு எதிராக தேசத் துரோகச் சட்டம் மற்றும் பல்லூடகம் மற்றும் தகவல் தொடர்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளீர்கள்,” என்று அவர் கூறினார்.
விசாரணை அதிகாரி பணிவானவர் என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
2015-ஆம் ஆண்டில், பிரிவு 3 (1) (c)-ஐ இரத்து செய்வதற்காக, தேசத்துரோகச் சட்டம் திருத்தப்பட்டதால் நீதித்துறை குறித்து கருத்து தெரிவிப்பது ஒரு குற்றமல்ல என்று சார்லஸ் வலியுறுத்தினார்.
“மக்கள் பிரதிநிதி என்ற வகையில், நான் எனது அரசியலமைப்பு உரிமைகளை மட்டுமே பயன்படுத்துகிறேன் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
“ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் முக்கியமான மற்றும் பொருத்தமான கேள்விகளை எழுப்புவது எனது தனி அதிகாரத்திற்கு உட்பட்டது.
“இந்தப் போலிஸ் விசாரணை, எனது குரலை மௌனமாக்குவதற்கான ஒரு பயங்கரச் செயல், ஆனால் நீதிக்காகப் போராடுவேன் என நான் சத்தியம் செய்தேன், எனது நாட்டிற்கும் எனது மனசாட்சிக்கும் சிறந்த முறையில் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன்,” என்று அவர் கூறினார்.
சார்லஸுடன் அவரது வழக்கறிஞர் ஜான் ஃபாம் இருந்தார்.