இன்று, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமும் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைமை பிரதிநிதிகளும் மக்களவை சபாநாயகர் அஸிஸான் ஹருனுடன் நாடாளுமன்றத்தில் சந்திப்பு ஒன்றினை நடத்தினார்.
“அக்கூட்டத்தின் போது, அண்மையில் இஸ்தானா நெகாரா வெளியிட்ட ஊடக அறிக்கைக்கு ஏற்ப, மக்களவை அமர்வை நடத்த வேண்டியதன் அவசியத்தை நாங்கள் எழுப்பினோம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மார்ச் 3-ம் தேதி, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைக்க, தேசியக் கூட்டணி (பிஎன்) நிர்வாக அமைச்சரவை ஒப்புக்கொண்டது எனப் பிரதமர் திணைக்களத்தின் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) அமைச்சர் தக்கியுதீன் ஹசான் கூறியுள்ளார்.
நாடாளுமன்றக் கட்டிடத்தில், தரவுகள் மற்றும் அறிவியல் பகுப்பாய்வுகளின் வழி கோவிட் -19 பரவல் குறித்த கவலையும், சட்டக் காரணங்களையும் தக்கியுதீன் முன்வைத்தார்.
மூத்தக் குடிமக்களாக இருக்கும் பெரும்பான்மையான எம்.பி.க்களின் நிலைமையும் கோவிட் -19 நோயால் பாதிக்கப்படக்கூடிய அதிக ஆபத்துள்ள குழுவாக அவர்கள் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், சபாநாயகருடனான சந்திப்புக்குப் பின்னர், அக்கூட்டத்தின் முடிவுகளை விவாதிக்க, பி.எச். தலைமை மன்றம் ஒரு கூட்டத்தை நடத்தியதாக அன்வர் தெரிவித்தார்.
“தலைமை மன்றக் கூட்டத்தில் சில தற்போதையப் பிரச்சினைகள் மற்றும் 15-வது பொதுத் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து பேசப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.