ஜிஇ15 : பெர்சத்து – பி.என். ஒத்துழைப்பு இரகசியமாகவே உள்ளது

நேற்றிரவு நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், தேசியக் கூட்டணியுடனான தற்போதைய ஒத்துழைப்பு தொடரும் என்று முடிவு செய்யப்பட்டதாக அக்கூட்டணியின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

கோலாலம்பூர், புத்ரா உலக வாணிப மையத்தில், நேற்று நடந்த சந்திப்பின் போது அம்னோ, மசீச, ம.இ.கா மற்றும் பிபிஆர்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய முன்னணி கூட்டணி இந்த முடிவை எடுத்ததாக பெயர் குறிப்பிட மறுத்த ஒருவர் தெரிவித்தார்.

“தேசியக் கூட்டணியுடன் தொடர்ந்து பணியாற்ற, தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது. (பிபிஆர்எஸ் தலைவர்) ஜோசப் குருப் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. மற்றவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

“பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், டிஏபி மற்றும் அமானா ஆகியோருடனான ஒத்துழைப்பை நிராகரிக்க தேசிய முன்னணி முடிவு செய்துள்ளது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இருப்பினும், அந்த ஒத்துழைப்புக்கு ஒரு குறிப்பிட்ட காலம் இருக்கிறதா என்று கேட்டபோது, ​​அதை வெளியிட அவர் மறுத்துவிட்டார்.

“அது இரகசியம்,” என்று அவர் சுருக்கமாக கூறினார்.

15-வது பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ15) முன்னதாக, பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி உடனான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கட்சியின் உச்சமன்ற (எம்டி) முடிவைத் தெரிவிக்க, அம்னோ பிரதமர் முஹைதீன் யாசினுக்குக் கடிதம் அனுப்பியதாக, நேற்று மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 26 தேதியிட்ட அக்கடிதத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை, தேசியக் கூட்டணி அரசாங்கத்துடனான ஒத்துழைப்பைத் தொடரலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரம், பின்னர் பெர்சத்து பொதுச்செயலாளர் ஹம்சா ஜைனுடினின் ஓர் அறிக்கையால் உறுதிப்படுத்தப்பட்டது, அவர் இன்று பிற்பகல் அம்னோவுடனான பெர்சத்து உறவைப் பற்றி விவாதிக்கவுள்ளதாகக் கூறியுள்ளார்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்தில், அம்னோவின் நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்படும் என்றார்.

மலேசியாகினி அம்னோ, மசீச, ம.இ.கா. தலைவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களின் கருத்துகளைப் பெற முயற்சிக்கிறது.

இதற்கிடையில், ஜிஇ15-ல் பெர்சத்துவுடனான ஒத்துழைப்பை முடிவுக்கு கொண்டுவருவதற்கான அம்னோவின் முடிவு விவாதிக்கப்படவில்லை என்று அதே ஆதாரம் தெரிவித்தது.

“பெர்சத்து – அம்னோ ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படவில்லை.

“இது அம்னோவின் உள்பிரச்சினை. இதில் தேசிய முன்னணிக்கு எந்தத் தொடர்பும் இல்லை,” என்று அவர் கூறினார்.

இன்று, தேசிய முன்னணியுடன் எந்தச் சந்திப்பும் இல்லை என்பதையும் அந்த ஆதாரம் உறுதிப்படுத்தியது.

“இன்று என்ன செய்ய விரும்புகிறீர்கள்? நேற்று நாங்கள் மூன்று மணி நேரம் சந்திப்பு நடத்தினோம்.

“பல்வேறு விஷயங்களைப் பற்றி விவாதித்தோம். இன்று நாங்கள் மீண்டும் சந்திப்போம் என்பது உண்மையல்ல,” என்று அவர் கூறினார்.

இன்று தேசிய முன்னணி மீண்டும் சந்திக்கவுள்ளது என்ற வதந்திகள் குறித்து கேட்டபோது அவர் இதனை கூறினார்.