பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) டிக்கெட்டுகளில் வென்ற இரண்டு பேராக் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரப்பூர்வமாகத் தேசியக் கூட்டணி அரசாங்கத்தில் சேர்கின்றனர்.
சட்டமன்ற உறுப்பினர்கள், பால் யோங் (துரோனோ) மற்றும் எ சிவசுப்பிரமணியம் (புந்தோங்) இருவரும் பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியில் இணையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசியக் கூட்டணியை ஆதரிப்பதற்காக, கடந்த மார்ச் மாதம் அவர்கள் இருவரும் டிஏபி கட்சியை விட்டு வெளியேறினர்.
முன்னதாக, சிவசுப்பிரமணியம் கெராக்கானில் இணைந்தது குறிப்பிடத்தக்கது, அதேநேரத்தில், யோங் ஒரு சுயாதீன சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். சிவசுப்பிரமணியத்தின் சமீபத்திய நகர்வினால், கெராக்கானுக்கு இப்போது பேராக்கில் பிரதிநிதித்துவம் இல்லாமல் போனது.
இன்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, யோங் மற்றும் சிவசுப்பிரமணியம் பெர்சத்துவில் இணைவதைப் பேராக் பெர்சத்து செயலாளர் ஜைனோல் ஃபட்ஸி பஹாருதீன் உறுதிப்படுத்தினார்.
ஜைனோலின் கூற்றுப்படி, முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரின் விண்ணப்பத்திற்கும், பெர்சத்து கடந்த டிசம்பரில் ஒப்புதல் அளித்தது.
யோங் தற்போது பத்து காஜா பெர்சத்துவில் உறுப்பினராக உள்ளார், சிவசுப்பிரமணியம் ஈப்போ பாராட்டில் இருக்கிறார்.
பூமிபுத்ரா அல்லாதவர்களான, யோங் மற்றும் சிவசுப்பிரமணியம் பெர்சத்து பிரிவின் ஒரு பகுதியாக இருப்பார்கள். இருப்பினும், கட்சி அரசியலமைப்பின் படி, இணை உறுப்பினர்களுக்குக் கட்சி விவகாரங்களில் வாக்களிக்கும் உரிமை இல்லை.