ம.இ.கா. : ஜாஹித்தின் அறிக்கை தவறானது, பி.என். மக்களவையைக் கூட்ட முறையிடவில்லை

தேசிய முன்னணி (பி.என்.) தலைமைக்குக், குறிப்பாக அம்னோவுக்குப் பெரும் அடியாக, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம் எனும் அஹ்மத் ஜாஹித் ஹமீடியின் அறிக்கை அவதூறானது என ம.இ.கா. கூறியுள்ளது.

மறுபுறம், புதன்கிழமை நடந்த தேசிய முன்னணி கூட்டத்தில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடர்பாக அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷாவின் உத்தரவுடன் எந்த அனுமானத்தையும் செய்யக்கூடாது என்று முடிவெடுத்ததாக ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கூறினார்.

“பி.என். தலைவரின் அறிக்கையால் நான் அதிர்ச்சியடைகிறேன். நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்ட உத்தரவிடுமாறு மாமன்னருக்கு முறையிடும் எந்தவொரு முடிவையும் பி.என். கூட்டத்தில் ஒருபோதும் ஆதரிக்கவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற, பி.என். கூட்டத்தில் உடன்படவில்லை என்ற ஊகங்களைத் தெளிவுபடுத்தக் கேட்டபோது விக்னேஸ்வரன் இதனைக் கூறினார்.

நேற்று, அஹ்மத் ஜாஹித் ஓர் அறிக்கையை வெளியிட்டார், அதில் மாமன்னருக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு பி.என். வேண்டுகோள் விடுத்துள்ளதாகக் கூறினார்.

ஆனால், முன்னாள் மக்களவை சபாநாயகரான விக்னேஸ்வரன், அம்னோ தலைவரின் அறிக்கை தவறானது என்று கூறினார்.

“நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்த வேண்டும் எனும் பிரச்சினை உண்மையில் விவாதிக்கப்பட்டது.

“ஆனால், பேரரசர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடவில்லை என்றும், பிரதமரின் ஆலோசனையின் பேரில், அவரது மாட்சிமைக்குப் பொருத்தமானதாகக் கருதப்படும் ஒரு தேதியில், அவசரக் காலங்களிலும் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என்று பரிந்துரை மட்டுமே செய்ததாகவும் சில தரப்பினர் கூறினர்.

“எனவே, எந்தவொரு அனுமானங்களையும் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை நாங்கள் எடுத்தோம், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடர்பாக எந்தவொரு அறிக்கையும் வெளியிட வேண்டிய அவசியமில்லை,” என்று அவர் கூறினார்.

பதிவுக்காக, புத்ரா உலக வாணிப மையத்தில், கடந்த புதன்கிழமை நடந்த பி.என். கூட்டத்தில் ஜாஹித் ஹமிடி, விக்னேஸ்வரன், அம்னோ துணைத் தலைவர் மொஹமட் ஹசான், இரண்டு உதவித் தலைவர்களான இஸ்மாயில் சப்ரி மற்றும் மஹ்ட்சீர் காலித் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மசீச தேசியத் தலைவர் வீ கா சியோங், துணைத் தலைவர் மா ஹாங் சூன் மற்றும் தலைமைச் செயலாளர் சோங் சின் வூன் மற்றும் ம.இ.கா. துணைத் தலைவர் எம் சரவணனும் கட்சியின் தலைமைச் செயலாளர் எம் அசோஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதற்கிடையில், பிபிஆர்எஸ் தலைவர் ஜோசப் குருப் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை, அவருடைய மகன் ஆர்தர் ஜோசப் குருப் பிரதிநிதித்துவப்படுத்தினார், அவர் கட்சியின் துணைத் தலைவரும் ஆவார்.

இதற்கிடையில், பெர்சத்துவுடனான ஒத்துழைப்பு குறித்து கேட்டபோது, ​​ அம்னோவின் முடிவு, பி.என்.னின் முடிவு ஆகாது என்று விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.

“பெர்சத்து மற்றும் தேசியக் கூட்டணி உடனான அரசியல் ஒத்துழைப்பு பிரச்சினையில், இப்போது தேசிய முன்னணியின் முடிவுதான் முக்கியம், அம்னோவின் முடிவு அல்ல,” என்று அவர் கூறினார்.

பக்காத்தான் ஹராப்பானுடன் தேசிய முன்னணி ஒருபோதும் ஒத்துழைக்காது என்று அஹ்மத் ஜாஹித் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.

“எந்த நேரத்திலும் டிஏபி, பி.கே.ஆர். மற்றும் அமானாவுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன் என்று ஜாஹித் கடவுளின் பெயரில் உறுதியளித்தார்,” என்றும் அவர் கூறினார்.