அன்வாரின் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்

ஓரினச் சேர்க்கை வழக்கு 2-ல் உயர்நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பை எதிர்த்து, அன்வர் இப்ராஹிம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதில் இருந்து மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகினார்.

அன்வாரின் மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவில் இருந்து விலகுவதாக கமலுடின் முஹமட் சைட் இன்று அறிவித்தார்.

அன்வர் சம்பந்தப்பட்ட வழக்கில் இருந்து கமலுடின் விலகுவது இது முதல் முறை அல்ல.

2017-ஆம் ஆண்டில், பி.கே.ஆர். தலைவரின் விண்ணப்பத்தைச் செவிமடுப்பதில் இருந்தும் அந்த நீதிபதி விலகினார்.

நீதிபதியாக வருவதற்கு முன்பு, அன்வர் சம்பந்தப்பட்ட சுக்மா தர்மவன் சஸ்மிதாத் மட்ஜாவுடனான ஓரினச் சேர்க்கைக் குற்றச்சாட்டு வழக்கு 1-ல், அரசு தரப்பு துணை வழக்குரைஞர்களில் ஒருவராக கமலுடின் இருந்தார்.

2010-இல், அன்வர் சம்பந்தப்பட்ட வழக்குகளில், மூத்த வழக்கறிஞராக கமலுடின் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

முன்னதாக, ஓரினப்புணர்ச்சி வழக்கு 2 தொடர்பில், அரசாங்கத்திற்கு எதிரான அன்வரின் மேல்முறையீட்டை விசாரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிர்ணயித்தது.

ஓரினப்புணர்ச்சி வழக்கு 2, அன்வர் தனது முன்னாள் உதவியாளரான மொஹமட் சைபுல் புகாரி அஸ்லானைத் தூண்டிவிட்டார் என்றக் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியது.

அன்வர், மலேசிய அரசாங்கத்திற்கு எதிராக, கடந்த ஜூன் 9, 2017 அன்று தாக்கல் செய்த ஆரம்ப வழக்கில், தனக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில், அவர் அளித்த மேல்முறையீட்டில் அவர் நியாயமான முறையில் விசாரிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.