நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த உத்தரவிடுமாறு தேசிய முன்னணி (பி.என்.) மாமன்னருக்கு வேண்டுகோள் விடுத்ததாகக் கூறும் அஹ்மத் ஜாஹித் ஹமிடியின் அறிக்கை தவறானது என்று ம.இ.கா. தேசியத் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இன்று சில பி.என். தலைவர்கள் அதை உறுதிப்படுத்த முன்வந்தனர்.
“விக்கி (விக்னேஸ்வரன்) கூறியது சரிதான என்பதை நான் உறுதி செய்கிறேன்,” என்று மலேசியாகினி தொடர்பு கொண்டபோது மசீச தேசியத் தலைவர் வீ கா சியோங் கூறினார்.
பிபிஆர்எஸ் துணைத் தலைவர் ஆர்தர் ஜோசப் குருப், “(அம்னோ தலைவரால்) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கைக்குப் பி.என். உச்சமன்றம் உடன்படவில்லை,” என்றார்.
முன்னதாக, இரு தலைவர்களிடமும் விக்னேஸ்வரனின் அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
தேசிய முன்னணி கூட்டணியில் இப்போது அம்னோ, மசீச, ம.இ.கா. மற்றும் பிபிஆர்எஸ் ஆகிய நான்கு உறுப்புக் கட்சிகள் உள்ளன.
ஜிஇ15-ல், பெர்சத்துவுடனான உறவுகளைக் கட்சி துண்டித்துகொள்ளும் என்று அம்னோ முன்னர் பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தது.
முஹைடின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் இப்போது அம்னோ மற்றும் பாஸ் உள்ளிட்ட முவாஃபாகத் நேஷனல் கூட்டணியால் ஆதரிக்கப்படுகிறது. தவிர, சபா மற்றும் சரவாக் மாநிலங்களைச் சேர்ந்த சில கட்சிகளும் தேசியக் கூட்டணியை ஆதரிக்கின்றன.