தேசியக் கூட்டணிக்கு (பி.என்.) ஆதரவளிக்க, அரசு நிறுவனங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சிகள் நடப்பதாக பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) குற்றஞ்சாட்டியுள்ளது.
அரசாங்க நிறுவனங்களான காவல்துறை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) மற்றும் உள்நாட்டு வருவாய் வாரியம் ஆகியவற்றை “அரசியல் ஆயுதங்களாகப்” பயன்படுத்தி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கபப்டுவதாக பி.எச். தலைமை மன்றம் கூறியது.
“இந்த நேரத்தில், பிரதமர் முஹைதீன் யாசினுக்கு ஆதரவை வெளிப்படுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுக்கிறது என எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
“கொள்கையளவில், சட்டம் மற்றும் ஒழுங்கை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு செயலையும் நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால், ஒரு நேரடி அரசியல் எதிரியைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ அல்லது அச்சுறுத்தவோ செய்யும் நோக்கத்துடன் ஒரு நிறுவனம் அல்லது நிறுவனத்தைத் துஷ்பிரயோகம் செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது,” என்று பி.எச். தலைமை மன்றம் ஓர் அறிக்கையில் கூறியது.
அந்த அறிக்கையில், பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம், அமானா தலைவர் மொஹமட் சாபு மற்றும் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அண்மையில் கட்சியை விட்டு வெளியேறிய லிம் மற்றும் அவரது மனைவி, இரண்டு பி.கே.ஆர். எம்.பி.க்களான லேரி ஸ்ங் (ஜூலாவ்) மற்றும் ஸ்டீவன் சோங் (தெப்ராவ்) ஆகியோருக்கும், இப்போது “மறைமுகமாக” கோலா லங்காட் எம்.பி. சேவியர் ஜெயக்குமார் ஆகியோருக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளதாக பி.எச். தலைமை மன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னதாக, லேரியும் ஸ்டீவன் சோங்கும் தங்கள் வாக்காளர்களின் நலனுக்காக தேசியக் கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்ததாகக் கூறினர்.
சமீபத்தில், மார்ச் 3-ம் தேதி, பி.கே.ஆரைச் சேர்ந்த செகிஞ்ஜாங் நாடாளுமன்ற உறுப்பினர், நத்ரா இஸ்மாயிலை காண இரண்டு நபர்கள் வந்ததாகவும், முஹைதீனை ஆதரிப்பதில் ஆர்வம் உள்ளதா என்று கேட்டதோடு, ஆதரிப்பதால் அவர் பெறக்கூடும் நன்மைகளையும் அவரிடம் விளக்கியதாகவும் நத்ரா தெரிவித்தார்.
இருப்பினும், நத்ரா தன்னை சந்தித்த நபர்கள் குறித்தும், கிடைக்கவிருக்கும் சலுகைகள் குறித்தும் மேலும் கூறவில்லை.
“தேசியக் கூட்டணி சிறுபான்மை அரசாங்கத்திற்கு ஆதரவை அதிகரிக்கும் நோக்கத்திற்காக, அரசு நிறுவனங்கள் ‘அரசியல் ஆயுதங்கள்’ பயன்படுத்தப்படுவதை பி.எச். கடுமையாக கண்டிக்கிறது,” என்று அவர்கள் கூறினர்.