லிம் : ஜிஇ 15-ல் டிஏபி மற்றும் அம்னோ இடையே எந்த ஒத்துழைப்பும் இல்லை

15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), டிஏபி மற்றும் அம்னோ இடையே எந்தவோர் அரசியல் ஒத்துழைப்பும் இருக்காது என்று டிஏபி பொதுச்செயலாளர் லிம் குவான் எங் இன்று தெரிவித்தார்.

கட்சியின் நிலைப்பாடு சீரானது என்று கூறிய லிம், ஆனால் மக்களுக்குப் பயனளிக்கும் என்றால் மட்டுமே, அம்னோவுடன் இணைந்து பணியாற்ற டிஏபி தயாராக உள்ளது என்று விளக்கினார்.

“இது மக்களுக்கு நலனளிக்கும் என்றால், நாங்கள் ஆதரவை வழங்க தயாராக இருக்கிறோம்….

“ஆனால், கட்சியின் நலன்களின் அடிப்படையில் அம்னோவுடன் எந்த ஒத்துழைப்பும் இல்லை,” என்று அவர் இன்று கூறினார்.

லிம் கருத்துப்படி, ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஓர் அணுகுமுறையை எடுத்துக்கொள்வது என்பது அம்னோவுடன் இணைந்து செயல்படுவதைக் குறிக்காது, ஆனால் நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு அழைப்பு விடுவது போன்ற மக்களின் நலனுக்காகப் பணியாற்றத் தயாராக இருப்போம் என்றார்.

கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்போது, ​​கோவிட் -19 நடவடிக்கைகள் குறித்த பாஸ் கட்சியின் தீர்மானத்தை டிஏபி எதிர்க்கவில்லை என்று அவர் விளக்கினார்.

இதற்கிடையில், பாகான் எம்.பி.யுமான லிம், கூட்டாட்சி அரசியலமைப்பிற்கு எதிரானதாக இல்லாவிட்டாலும், நல்ல மற்றும் தூய்மையான ஆளுகை கொள்கைகளுக்கு இணங்க, கட்சி தாவல்களை டிஏபி ஆதரிக்காது என்றார்.

முன்னதாக, பி.எச். தலைவர் அன்வர் இப்ராஹிம் மற்றும் பி.கே.ஆர். தகவல் தொடர்பு இயக்குநர் பாஹ்மி ஃபட்ஸில், அடுத்த ஜி.இ.யில் அம்னோவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை நிராகரிக்கவில்லை என்று கூறியிருந்தனர்.