பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்) புதிய இளைஞர் பிரிவு தலைவராக அமானா இளைஞர் பிரிவு தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின் நியமிக்கப்பட்டதால், அவர்களது உறுப்பினர்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஏமாற்றமடைந்துள்ளதாக பி.கே.ஆர். இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் (ஏ.எம்.கே) தீபன் சுப்பிரமணியம் கூறினார்.
எவ்வாறாயினும், பி.எச். மத்தியத் தலைமை மன்றம் எடுத்த அந்த முடிவை அவர்கள் நிராகரிப்பதாக அர்த்தமல்ல என்று அவர் கூறினார்.
“ஷெரட்டன் நகர்வுக்குப் பிறகு, நாங்கள், பி.எச். இளைஞர்கள் ஈஸ்டின் ஹோட்டலில் அவசரக் கூட்டத்தை நடத்தினோம். கூட்டத்தில், பி.எச். இளைஞர்கள் (பி.கே.ஆர். இளைஞர் தலைவர்) அக்மல் நசீரைப் புதிய இளைஞர் (பி.எச்.) தலைவராக நியமிக்க ஒப்புக்கொண்டோம்.
“ஆனால், முன்னாள் அமானா இளைஞர் தலைவர் ஹஸ்னுல் சுல்கர்னைன் அப்துல் முனைம் பி.எச். கூட்டணியை விட்டு வெளியேறிய பின்னர், அதை செயல்படுத்த எங்களால் செயல்படுத்த முடியவில்லை, கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நாங்கள் கூட்டத்தை நடத்தவில்லை.
“ஆனால், சமீபத்தில் பி.எச். தலைமைக் குழு, புதிய பி.எச். இளைஞர் தலைவராக ஷஸ்னியை நியமிக்க முடிவு செய்தது, இதனால் ஏ.எம்.கே.-இல் சிலர் சற்று ஏமாற்றமடைந்தனர்.
“இருப்பினும், நாங்கள் ஷஸ்னியை நிராகரிப்பதாக அர்த்தமல்ல. பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் தலைமையிலான பி.எச். மத்தியத் தலைமைக் குழுவின் எந்தவொரு முடிவையும் ஏ.எம்.கே. உறுப்பினர்களான நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
ஷஸ்னியின் நியமனம் குறித்து பி.கே.ஆர். இளைஞர் பிரிவு திருப்தி அடையவில்லை என்றக் குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
முன்னதாக, மார்ச் 4-ம் தேதி, ஷஸ்னியின் நியமனம் பல பி.கே.ஆர் இளைஞர்களிடமிருந்து எதிர்ப்பைப் பெற்றதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டது.
ஏ.எம்.கே. உறுப்பினர்கள், அதன் தலைவரான அக்மலுக்கு இந்தப் பதவியை வகிக்க ஆதரவளித்த போதிலும் இந்த நியமனம் செய்யப்பட்டது.
மலேசியாகினி பார்த்த அறிக்கையின் படி, அக்கட்சி அடிமட்ட இயந்திரங்களின் வலிமையைக் கொண்டிருப்பதால், அக்மலை அப்பதவிக்கு நியமிக்க வேண்டும் என்று ஏ.எம்.கே. கூறியது.
கல்வி நம்பகத்தன்மையைத் தவிர, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக, அக்மலின் நிலை மற்ற வேட்பாளர்களை விட அவருக்குக் கூடுதல் நன்மையை அளிக்கிறது என்றது ஏ.எம்.கே.
எவ்வாறாயினும், பி.எச். முன்னோக்கி செல்ல வேண்டியது மிக முக்கியமானது என்று தீபன் கூறினார்.
“இப்போது பி.எச். இளைஞர்களின் முக்கியக் கவனம் ’18 வாக்காளர்கள்’.
“நாங்கள் பி.கே.ஆர்., டிஏபி மற்றும் அமானா இளைஞர்கள் ஒன்றிணைந்து ’18 வாக்காளர்கள்’-ஐ செயல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்போம்,’ என்றார் அவர்.