‘பி.என்.-ஐ ஆதரிக்க கட்சி தாவல்’ – துவாரான் எம்.பி. மறுப்பு

துவாரான் நாடாளுமன்ற உறுப்பினர், வில்ஃபெரட் மடியுஸ் தங்காவ், சபாவில் தேசியக் கூட்டணியை (பி.என்.) ஆதரிப்பதற்காக கட்சி தாவும் எம்.பி.க்களில் தானும் ஒருவர் என்றக் குற்றச்சாட்டை மறுத்தார்.

கினாபாலு ஐக்கிய முற்போக்கு அமைப்பின் (யு.பி.கே.ஓ) தலைவரான அவர், எதிர்க்கட்சித் தலைவர்களிடையே உறுதியற்றத் தன்மையை ஏற்படுத்துவதற்காக சில தரப்பினரால் வேண்டுமென்றே போலி செய்திகள் வெளியிடப்படுகின்றன என்றார்.

“எனது பெயரை இணைத்து, ஒரு செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளதாக எனது யு.பி.கே.ஓ. நண்பர்களால் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது… அதாவது, எதிர்க்கட்சி எம்.பி.க்களில் ஒருவனான நான், பி.என். அரசாங்கத்தை ஆதரிக்க கட்சி தாவியுள்ளதாக.

“இது பொறுப்பற்ற தரப்பினரின் தீவிர முயற்சி. குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக மறுக்கிறேன்… .இந்த அவதூறைப் பரப்புவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் நிறுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது நிறுத்தப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க நான் தயங்கமாட்டேன்,” என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

14-வது பொதுத் தேர்தலில், தேசிய முன்னணி டிக்கெட்டில் நாடாளுமன்ற இருக்கையை வென்ற ஒரே யு.பி.கே.ஓ. பிரதிநிதியாக மடியுஸ் இருந்தார், ஆனால் பின்னர் அவர், யுபி.கே.ஓ.-வை தேசிய முன்னணியிலிருந்து வெளியேற்றி, சபா வாரிசான் கட்சியுடன் இணைத்து, புதிய சபா அரசாங்கத்தை நிறுவி செயல்பட்டார்.

  • பெர்னாமா