பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பள்ளிப் படிப்பைக் கைவிட்ட ஆண் மற்றும் பெண் மாணவர் விகிதங்கள் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்துமாறு முன்னாள் துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கல்வி அமைச்சிடம் கேட்டுக்கொண்டார்.
நேற்று, ஓர் இயங்கலை நிகழ்ச்சியில் பேசிய தியோ, பள்ளிப் படிப்பைக் கைவிட்ட மாணவர் எண்ணிக்கையைப் பாலினக் கண்ணோட்டத்தில் பார்ப்பது அமைச்சுக்கு மிகவும் முக்கியமானது என்றார்.
“இடைநிலைப் பள்ளி கல்வி கட்டாயமாக இல்லாததால், சில பெற்றோர் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக, தங்கள் மகள்களைப் பள்ளிக்கு அனுப்புவதில்லை என்பதை நாம் அறிவோம்.
“சில நேரங்களில் அவர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வது ஒரு சிறந்த வழி என்று நினைக்கிறார்கள். அல்லது குடும்பத்திற்குச் சில கூடுதல் உதவிகள் தேவைப்படுவதால் (பலகாரங்கள் தயாரிப்பது போன்ற சிறு தொழில்களில்), பெண் பிள்ளைகளுக்குப் படிக்கும் ஆர்வம் இருந்தாலும், பெற்றோர் அவளைப் பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள்.
மார்ச் மாதத்தில் தொடக்கப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதும், அடுத்த ஏப்ரல் மாதத்தில் இடைநிலைப் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் போதும், பள்ளி விடுப்பு விகிதங்களை அமைச்சு கவனிக்க வேண்டும் என்று தியோ கூறினார்.
தற்போது பள்ளிப் படிப்பு 6 வயது முதல் 12 வயது வரை மட்டுமே கட்டாயமாகும் என்ற அவர், படிவம் 5 அல்லது 17 வயது வரை கல்வி கட்டாயமாக இருக்கும்படி சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அமைச்சு இந்த விஷயத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் என்று நம்புவதாகவும் அவர் சொன்னார்.
“படிவம் 3-க்குப் பிறகு, மாணவர்கள் தொழிற்கல்வியைத் தொடரத் தேர்வு செய்யலாம், இதுவும் ஒரு வகையான கல்வியாகும்,” என்று அவர் கூறினார்.