தனது நாடாளுமன்றத் தொகுதியில் ஏற்பட்டிருக்கும் நதி மாசுபாட்டிற்குத் தீர்வுகாண, தனக்கு கிடைத்திருக்கும் ‘புதிய அணுகலை’ பயன்படுத்துமாறு தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங்கை ஜொகூர் பி.கே.ஆர். கேட்டுக்கொண்டது.
நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அல்லது அரசு நிறுவனங்களின் தலைவர்களைச் சந்திப்பதற்கான அணுகலைப் பெறுவதற்காக எனப் போலிக்காரணங்கள் கூறி, பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையை ஆதரிப்பதற்காக சோங் கட்சியை விட்டு வெளியேறினார் என்று பி.கே.ஆர். தெரிவித்தது.
இது குறித்து கருத்து தெரிவித்த சோங், இன்று பிற்பகல் சுற்றுச்சூழல் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான்னுடன் அவ்விடத்திற்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவித்தார்.
“நான் இன்று மதியம் 3 மணிக்கு அமைச்சருடன் அப்பகுதியில் இருப்பேன்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
நேற்று, கிம் கிம் ஆற்றில் கருப்புப் புள்ளிகள் கண்டுபிடிக்கப்பட்டன, 2019-ஆம் ஆண்டில், அந்த ஆற்றில் கொட்டப்பட்ட இரசாயனக் கழிவுகள் 2,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தைப் பாதித்தன, மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.
முன்னதாக, ஜொகூர் பி.கே.ஆர். தலைவர் ஜிம்மி புவா மற்றும் தெப்ராவ் பி.கே.ஆர். தலைவர் தியோ எங் ஹூன் ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்குமாறு சோங்கை கேட்டுக் கொண்டனர்.
தியோ சமீபத்தில் சோங்கிற்குப் பதிலாக தெப்ராவ் பி.கே.ஆர். தலைவராக நியமிக்கப்பட்டார்.
கிம் கிம் நதி தெப்ராவ் நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ளது என்றார் அவர்.
“எனவே, கிம் கிம் நதியை மாசுபடுத்தும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், எதிர்காலத்தில் அது மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வதற்கும் உடனடியாக பணியில் இறங்குமாறு தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
“இந்த மாசு பிரச்சினையை விரைவில் தீர்க்க முடியாவிட்டால், உடனடியாக இராஜினாமா செய்யுமாறு தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினரை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர்கள் கூறினர்.