அவசரநிலை அறிவிப்பு குறித்து பக்காத்தான் ஹராப்பானின் கூட்டு அறிக்கை தொடர்பாக, டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-ஐ போலீசார் நாளை விசாரிப்பர்.
விசாரணை, பினாங்கு, வடகிழக்கு மாவட்டக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெறும் என, லிம்மின் வழக்கறிஞரும் ஜெலுத்தோங் எம்.பி.யுமான ஆர்.எஸ்.என். இராயர் தெரிவித்தார்.
புக்கிட் அமானைச் சேர்ந்த குழு லிம் மீதான விசாரணையை நடத்தும். முன்னதாக, லிம் மீதான விசாரணை, பிப்ரவரி 23 அன்று தெரிவிக்கப்பட்டது.
இதே அறிக்கைக்காக, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமும் விசாரிக்கப்படுகிறார். அன்வாரைப் பிப்ரவரி 26 அன்று போலீசார் விசாரித்தனர்.
இரு தலைவர்களும், அமானா தலைவர் மொஹமட் சாபுவுடன் இணைந்து ஜனவரி 12-ம் தேதி தேசியக் கூட்டணி (பிஎன்) அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
அந்த அறிக்கையில், நாடு தழுவிய அவசரகால நிலையை அறிவித்த ஆளும் கட்சியின் முடிவைப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) தலைவர்கள் ஏற்கவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“கோவிட் -19 தொற்றிலிருந்து மலேசியாவைக் காப்பாற்ற, அவசரகாலப் பிரகடனம் தேவை என்று கூறப்படும் காரணத்தையும் (பிரதமர்) முஹைதீன் யாசின் அளித்த காரணங்களையும் நிராகரிக்கும் நிலைப்பாட்டை பி.எச். தலைமை மன்றம் எடுத்துள்ளது.
“நேற்று அறிவிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையைச் (பி.கே.பி) செயல்படுத்துவது உட்பட, தற்போதுள்ள சட்டங்கள் இந்தத் தொற்றுநோயைச் சமாளிக்க அனைத்து வளங்களையும் பலத்தையும் திரட்டுவதற்குப் போதுமானவை என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர்கள் அதில் கூறினர்.
மாச்சாங் மற்றும் பாடாங் ரெங்காஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்தபோது, அவசரநிலையை முன்வைக்க முஹைதீன் எடுத்த நடவடிக்கை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பி.எச். தெரிவித்தது.
“கோவிட் -19 தொற்றுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளாதீர்கள், உங்களைக் காப்பாற்றுவதற்காக அவசரகால அறிவிப்பை மக்கள் மீது சுமத்த வேண்டாம்,” என்றும் ஜனவரி 12-ம் தேதி வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்போதிருந்து, மேலும் இரண்டு பி.கே.ஆர். எம்.பி.க்கள் பி.என்-ஐ ஆதரிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, முஹைதீன் நாடாளுமன்றத்தில் மெலிதான பெரும்பான்மையைப் பெற்றார்.
கோவிட் -19 தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அவசரகால நிலை அறிவிப்பு அவசியம் என்று முஹைதீன் கூறினார்.
கோவிட் -19 தொற்றை சமாளித்து முடிந்தவுடன், தேர்தலை நடத்துவதாக அவர் உறுதியளித்தார். அவசரநிலை ஆகஸ்டில் முடிவடையும்.