குவான் எங் : முஹைதீனை விசாரிக்கும் துணிவு எம்.ஏ.சி.சி.க்கு உள்ளதா?

பிரதமர் முஹைதீன் யாசினை விசாரிப்பதன் மூலம் அது ஒரு சுதந்திரமான, நடுநிலையான மற்றும் நிபுணத்துவமான நிறுவனம் என்பதை நிரூபிக்கும் திறன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) உண்டா என லிம் குவான் எங் கேள்வி எழுப்பினார்.

பி.கே.ஆரிடமிருந்து விலகி, முஹைதீனுக்குத் தனது ஆதரவை மாற்றினால், தனக்கு உத்தியோகப்பூர்வப் பதவி வழங்குவதாக பிரதமர் வாக்குறுதியளித்தார் என தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து லிம் இவ்வாறு கூறினார்.

குறைந்தபட்சம், பணத்திற்காக அல்லது பரிசு பரிமாற்றத்திற்காக கட்சி தாவும் முயற்சிகள் சட்டத்தில் தவறானது மற்றும் அது ஊழல் நடைமுறை என்றாவது எம்.ஏ.சி.சி. வெளிப்படையாகக் கூற முடியுமா என்று லிம் கேள்வி எழுப்பினார்.

“பிரதமர் ஊழலைத் தடுப்பது அரசாங்கத்தில் தனது முக்கியக் கடமைகளில் ஒன்று எனக் கூறியுள்ளார்.

“ஆனால், அவர் அந்த வாக்குக்கு உண்மையாக இல்லை,” என்று அவர் இன்று ஓர் ஊடக அறிக்கையில் விளக்கினார்.

கோவிட் -19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த, முஹைதீன் தனக்கு அதிகாரப்பூர்வப் பதவி வழங்கப்படும் என உறுதியளித்ததாக நேற்று சோங் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2020 சர்வதேச வெளிப்படைத்தன்மை ஊழல் உணர்வு குறியீட்டு (சிபிஐ) அறிக்கையின் படி, மலேசியாவின் நிலை மோசமடைந்து வருவதையும் லிம் குறிப்பிட்டார்.

திறந்த தெண்டர்களில் மேற்பார்வை இல்லாதது, அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள், குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுதல் ஆகியவை இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்கள் என்று பாகான் எம்.பி.யுமான லிம் விளக்கினார்.

“எம்.ஏ.சி.சி. இதில் கவனம் செலுத்தவில்லை என்றால், இந்த ஆண்டு குறியீட்டில் மலேசியாவின் நிலை இன்னும் குறையும் என்பதில் ஆச்சரியமில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.