அனைத்து அம்னோ தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம் – திரெங்கானு பெர்சத்து

திரெங்கானுவில், அம்னோ போட்டியிடும் அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களைக் களமிறக்க பெர்சத்து தயாராக இருப்பதாக அதன் தலைவர் ரசாலி இட்ரிஸ் தெரிவித்தார்.

“நாங்கள் (பெர்சத்து) வேட்பாளர்களைக் களமிறக்க அனுமதிக்க, பாஸ் தலைமை மற்றும் மந்திரி பெசாருடன் (டாக்டர் அஹ்மத் சம்சூரி மொக்தார்) கலந்துரையாடுவோம்.

“அம்னோ இருக்கைகள் இருக்கும் இடங்களில் நாங்கள் போராடுவோம்,” என்று அவர் கூறியதாக, இன்று உத்துசான் ஆன்லைன் மேற்கோள் காட்டியுள்ளது.

15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ15), 32 மாநிலச் சட்டமன்றங்களிலும், 8 நாடாளுமன்ற இடங்களிலும் திரெங்கானு அம்னோ போட்டியிட விரும்புவதாக அறிவித்ததை அடுத்து, பெர்சத்து இவ்வாறு கூறியுள்ளது.

ஜிஇ15 தொடங்கியவுடன், இரு கட்சிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அம்னோவின் முடிவைப் பெர்சாட்டு திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதாக ரசாலி கூறியதாகவும் உத்துசான் ஆன்லைன் மேற்கோள் காட்டியுள்ளது.

“எந்தப் பிரச்சனையும் இல்லை, ஏனெனில் நாங்கள் அரசியல்வாதிகள், தேர்தல்கள் எங்கள் வேலை,” என்று அவர் விளக்கினார்.

அடுத்த ஜிஇ-யில் ஒத்துழைப்பு இல்லை என்ற உச்சமன்ற (எஸ்சி) முடிவை, பிப்ரவரி மாத இறுதியில், பிரதமர் முஹைதீன் யாசினுக்குக் கடிதம் வாயிலாக அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தெரிவித்ததைத் தொடர்ந்து, திரெங்கானு பெர்சத்து இம்முடிவுவை எடுத்துள்ளது.

எவ்வாறாயினும், பெர்லிஸ் மற்றும் சபா அம்னோ, சமீபத்தில் நேர்மாறான நிலைப்பாட்டைக் கூறின, அதாவது தேசியக் கூட்டணியில் (பி.என்) ஒத்துழைப்பைத் தொடர அவை விருப்பம் தெரிவித்தன.

முன்னாள் தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் அன்வார் மூசா, இன்னும் சில அம்னோ பிரிவுகளும் மாநிலங்களும் அந்நிலைப்பாட்டை எடுக்கும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.