சுகாதார அமைச்சர் டாக்டர் ஆதாம் பாபாவைக் குறிப்பிடும் இரண்டு கேலிச்சித்திரங்கள் தொடர்பான அவதூறு குற்றச்சாட்டுகளுக்காக, காவல்துறையினரால் தான் விசாரிக்கப்பட்டு வருவதாக வரைகலை வடிவமைப்பாளர் பாஹ்மி ரேஸா தெரிவித்தார்.
புத்ராஜெயா காவல்துறையினரின் விசாரணைக்குப் பின்னர், அவதூறு தண்டனைச் சட்டம் பிரிவு 500 மற்றும் தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டம் பிரிவு 233-ன் கீழ் தான் விசாரிக்கப்படுவதாக ஃபஹ்மி தனது கீச்சகத்தில் எழுதியுள்ளார்.
“எனது (ஆடாமின்) கேலி வரைகலை படைப்புகளால் சுகாதார அமைச்சை அவதூறு செய்துள்ளதாக என்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை நான் எதிர்ப்பேன்,” என்று அவர் கூறினார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 500-ன் கீழ், விசாரணையை உறுதிப்படுத்த மலேசியாகினி காவல்துறையைத் தொடர்பு கொண்டுள்ளது.
ஆடாமைக் குறிப்பிடும் கேலிச்சித்திரம் தொடர்பில், பாஹ்மி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக நேற்று கூறப்பட்டது.
கடந்த அக்டோபரில், சுகாதார அமைச்சக அதிகாரிகள் அளித்த இரண்டு போலிஸ் புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்தப்பட்டதாகப் புத்ராஜெயா மாவட்டக் காவல்துறைத் தலைவர் மொஹமட் ஃபட்ஸில் அலி உறுதிப்படுத்தினார்.
அக்டோபர் 3-ஆம் தேதி வெளியிடப்பட்டக் கேலிச்சித்திரம், அதே ஆண்டு மார்ச் மாதம் அமைச்சரின் அறிக்கையைக் குறிப்பிட்டு (கோவிட் -19 நோய்த்தொற்றை வெதுவெதுப்பான நீரால் தடுக்க முடியும்) அவரைக் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது.