ஜொகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர், கடந்த வாரம் அறிவித்த சூரிய ஆற்றல் திட்டம் குறித்து கருத்து அல்லது ஒப்புதல் அளிக்காதது பற்றி தெளிவுபடுத்துமாறு பெக்கான் எம்.பி. நஜிப் ரசாக் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
மார்ச் 23-ஆம் தேதி திட்டமிடப்பட்ட தாமான் சோலார் சுல்தான் இப்ராஹிம் பூமிபூஜை விழாவைச் சுல்தான் இப்ராஹிம் நேற்று இரத்து செய்ததையடுத்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“பி.என். (தேசியக் கூட்டணி) அரசாங்கம் இந்தத் திட்டத்திற்கு ஏன் பின்னூட்டம் அல்லது ஒப்புதல் அளிக்கவில்லை என்பதைப் பொதுவாக விளக்க வேண்டும், ஜொகூர் சுல்தான் கோபப்படுவதைத் தவிர்க்கவும், ஜொகூர் மக்கள் மத்திய அரசாங்கத்தால் ஓரங்கட்டப்பட்டதாக உணராமல் இருக்கவும் அரசாங்கம் இதற்கு விளக்கமளிக்க வேண்டும்.
“பெங்கெராங்கில், தனியார் நிதியைப் பயன்படுத்தி, தனியார் அல்லது மாநில அரசு நிலத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை,” என்று நஜிப் தனது முகநூலில் தெரிவித்தார்.
இந்த RM1.4 பில்லியன் திட்டத்தை, கோத்தா திங்கி, பெங்கெராங்கில், மார்ச் 1-ம் தேதி ஜொகூர் சுல்தான் அறிவித்தார். இது 450 மெகாவாட் கொள்ளளவு கொண்ட தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரியத் திட்டமாகும்.
இருப்பினும், முன்மொழியப்பட்ட இத்திட்டத்தின் பங்குதாரர்கள் மற்றும் பயனாளிகள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்தத் திட்டத்திற்குப் புத்ராஜெயா பதிலளிக்கத் தவறியதை அடுத்து, சுல்தான் இப்ராஹிம், நிலபூஜை விழாவை இரத்து செய்வதாக நேற்று கூறினார்.
“சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சாரம் தயாரிப்பாளராக, ஜொகூருக்கு மத்திய அரசு ஒரு வாய்ப்பை ஏன் வழங்க முடியாது என்பதற்கானக் காரணத்தை என்னால் உணர முடியவில்லை.
“எங்களுக்குப் பொருத்தமான நிலப்பரப்புகள் உள்ளன, மாநிலத்தில் விரைவான வளர்ச்சி மற்றும் அண்டை நாடுகளின் தேவை, ஜொகூரை மிகவும் மூலோபாய இடமாக மாற்றும்,” என்று அவர் கூறினார்.