தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான ஒரு கருவியாக, அரச மலேசியக் காவற்படை (பி.டி.ஆர்.எம்.) பயன்படுத்தப்படுகிறது என்ற சில தரப்பினரின் குற்றச்சாட்டுகளை காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி.) அப்துல் ஹமீத் படோர் மறுத்தார்.
“யார் வேண்டுமானாலும் பி.டி.ஆர்.எம். குறித்து யூகங்கள், விமர்சனங்கள், அனுமானங்கள் மற்றும் எதையும் தெரிவிக்கலாம்.
“எனது தரப்பு எந்த நடவடிக்கைகளை எடுத்தாலும், அதற்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற எனது உறுதியான நிலைப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
“முன்னதாக, கடந்த காலங்களிலும் நிகழ்காலங்களிலும் பி.டி.ஆர்.எம். எதிர்க்கட்சியினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுத்ததாகக் கூறப்பட்டது,” என்று அவர் இன்று கோலாலம்பூர், புக்கிட் அமானில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அரசாங்கத்திற்கான ஆதரவை அதிகரிக்க, பி.டி.ஆர்.எம். உள்ளிட்ட அரசு நிறுவனங்களை அரசியல் ஆயுதமாக பி.என். பயன்படுத்துகிறது என்ற பக்காத்தான் ஹராப்பானின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்குப் பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.