கால் வெட்டப்படும் அளவுக்குக் காவல்துறையினர் தாக்கியுள்ளனர் – தாயார் புகார்

காவலில் இருந்தபோது தனது மகன் தாக்கப்பட்டார், அதன் விளைவாக அவரது கால் துண்டிக்கப்பட்டது என்றக் குற்றச்சாட்டின் பேரில் ஒரு பெண் இன்று போலிஸ் புகார் செய்துள்ளார்.

60 வயதான எஸ் தனலெட்சுமி, இன்று கோம்பாக் மாவட்டக் காவல் தலைமையகத்தில் அந்தப் புகாரை அளித்தார். அவருடன் அவரது வழக்கறிஞர் கே கணேஷும் இருந்தார்.

மலேசியாகினி பார்த்த அந்தப் புகாரில், தனலெட்சுமி தனது மகன், எ கணபதி, 40, பிப்ரவரி 24 அன்று கைது செய்யப்பட்டார், அவரது மற்றொரு பிள்ளையும்  போலிஸ் விசாரணைக்கு உதவுவதற்காகக் கைது செய்யப்பட்டார்.

“கைது செய்யப்படுவதற்கு முன்னர், ஒரு மோட்டார் கடையில் அவர் போலீஸ் அதிகாரிகளுடன் பேசுவதை என் மகள் கண்டார். அவர் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தார்.

“கணபதி தனது சகோதரியிடம் பிரச்சனைகள் ஏதும் இல்லை என்று கூறியுள்ளார் … பின்னர் இரவில், கணபதியின் நண்பர் ஒருவர் எங்களை அழைத்து, அவர் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்,” என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, நீரிழிவு நோய் மற்றும் இதயப் பிரச்சினைகள் இருந்த போதிலும் தடுத்து வைக்கப்பட்டபோது தனது மகன் உடல்நிலை சரியாக இருந்ததாக தனலெட்சுமி கூறினார்.

“இரண்டு நாட்கள் போலிஸ் தடுப்புக்காவலுக்குப் பிறகு, காவல்துறையினர் என் மகளை அழைத்து நீரிழிவு மற்றும் இதய நோய் மருந்துகளைக் கொண்டு வரச் சொன்னார்கள். அவர் மருந்து கொண்டு சென்றபோது, கணபதியைப் பார்க்கக் கேட்டுள்ளார், ஆனால் அனுமதிக்கப்படவில்லை.

“மார்ச் 8-ம் தேதி, திடீரென்று ஒரு சார்ஜெண்டிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, எனது மகன் விடுவிக்கப்பட்டு, செலாயாங் மருத்துவமனையின் தீவிரச் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மீது குற்றங்கள் எதுவும் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டார் என்றும் சொன்னார்,” என்று அவர் கூறினார்.

மருத்துவமனையில் அவரைச் சந்தித்தபோது, இரப்பர் குழாய் மூலம் போலீசார் தாக்கியதாக கணபதி தன்னிடம் கூறினார் என்று தனலெட்சுமி சொன்னார்.

“என் மகனின் உடல்நிலை ஆரோக்கியமாக இருந்தது, ஆனால் இப்போது அவருக்கு சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன, மேலும் அவரது கால் துண்டிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அவர் மோசமாகத் தாக்கப்பட்டுள்ளார், ஏனெனில் அவரது கால் வீங்கி, காயம்பட்டிருப்பதை நான் பார்த்தேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

தனது மகன் பால் வியாபாரம் செய்து வருவதாகவும், ஐந்து மற்றும் ஏழு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் தனலட்சுமி தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் கருத்துக்களைப் பெற மலேசியாகினி கோம்பாக் ஐபிடி-யைத் தொடர்பு கொண்டுள்ளது.

இதற்கிடையில், கைது செய்யப்படுவதற்கு முன்பு ஆரோக்கியமாக இருந்த ஒரு நபர், திடீரென உடல்நிலை சரியில்லாமல், கால் துண்டிக்கப்பட்டு சிறுநீரகங்கள் சேதமடையும் அளவுக்கு என்ன நடந்தது என்று கணேஷ் கேட்டார்.

“இப்போதைக்கு, காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது என்பதைக் காண நாங்கள் காத்திருக்கிறோம். பின்னர், நிச்சயமாக, இந்தப் பிரச்சினை நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.