‘பி.எச். அம்னோவுடன் ஒத்துழைப்பதற்கான கதவைப் பூட்டக்கூடாது’

அம்னோ உட்பட யாருடனும் அரசியல் ஒத்துழைப்பை ஏற்கப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) எப்போதும் திறந்திருக்க வேண்டும் என்று பி.கே.ஆர். இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் (ஏ.எம்.கே.) சையத் பத்லி ஷா சையத் ஒஸ்மான் தெரிவித்தார்.

மற்றக் கட்சிகளுடனான ஒத்துழைப்பை பி.எச். ஆராய வேண்டும், அது கூட்டணிக்கு அடுத்தப் பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைத் திறந்துவிடும் என்றார் அவர்.

தற்போதைய அரசியல் நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், பி.எச். எந்தவொரு கட்சியுடனான ஒத்துழைப்பையும் நிராகரிக்கக் கூடாது.

“பக்காத்தான் ஹராப்பான் ஆதரிக்கும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை மற்றக் கட்சிகள் ஏற்றுக்கொள்ள முடிந்தால், அரசியல் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது சாத்தியமே,” என்று சையத் பத்லி ஷா இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அம்னோவின் வரும் “நீதிமன்றத் திரளையுடன்” கூட்டணி செயல்படக்கூடாது என்று பி.எச். இளைஞர் பிரிவுத் தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின் நேற்று கூறியதை அடுத்து அவர் இவ்வாறு கூறினார்.

“நீதிமன்றத் திரளை” என்பது, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அதன் முன்னாள் தலைவர் நஜிப் ரசாக் மற்றும் கட்சியின் தலைமைச் செயலாளர் அஹ்மத் மஸ்லான் உள்ளிட்ட நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் பல அம்னோ தலைவர்களைக் குறிக்கும் சொல்.

பி.கே.ஆர். தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராஹிமுடன் இணைந்து பணியாற்ற, அக்குழு ஆர்வமாக இருப்பதாக பார்வையாளர்கள் நம்புகின்றனர், ஆனால் இந்த நடவடிக்கையை மற்ற அம்னோ தலைவர்களும் எதிர்க்கின்றனர்.

சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கும் எவருடனும் பி.எச். செயல்படும் என்ற கருத்தை மீண்டும் வலியுறுத்தியதன் மூலம், 15-வது பொதுத் தேர்தலில் அம்னோவுடனான ஒத்துழைப்பை அன்வர் நிராகரிக்கவில்லை.

எவ்வாறாயினும், நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள அம்னோ தலைவர்களுடன் ஒத்துழைப்பது பி.எச். மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் போராட்டத்தைக் கண்மூடித்தனமாகத் திருப்புவதற்கு ஒத்ததாகும் என்று ஷஸ்னி கூறினார்.

“அது சாத்தியமில்லை (ஒத்துழைக்க). நாம் அந்தத் திசையில் சென்றால், அது நிகழும்போது மக்களுக்கு எவ்வாறு பதிலளிக்கப் போகிறோம் என்பதே மிகப்பெரிய கவலை.

“நாம் எதை நியாயப்படுத்த விரும்புகிறோம்? பல ஆண்டுகளாக நாம் ஊழலுக்கு எதிராக இருந்தோம். பல ஆண்டுகளாக நாம் அதிகாரத் துஷ்பிரயோகத்திற்கு எதிராக இருந்தோம்.

“திடீரென்று பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும்போது, அல்லது அதற்குப் பிறகு, இது போன்ற தரப்பினருடன் நாம் ஒத்துழைக்கிறோம்.

“சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை எப்போதும் ஆதரித்து, நம்பிய மக்களை நாம் என்ன செய்வது, அவர்களிடம் என்ன கூற விரும்புகிறோம்,” என்று ஷஸ்னி கூறினார்.