‘டாக்டர் ரஃபிடா மீது போலி செய்தி சட்டம் பாயுமா?’ – கிட் சியாங்

மூத்த டிஏபி தலைவர் லிம் கிட் சியாங், போலி செய்திகள் தொடர்பான அவசரச் சட்டம் சீறுநீரகவியல் வல்லுனர் டாக்டர் ரஃபிடா அப்துல்லாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.

கிளாந்தான் மாநிலச் செயலாளர் அலுவலகத்தின் (எஸ்.யு.கே) அதிகாரிகள், கோவிட் -19 தடுப்பூசி பெறுபவர்களின் வரிசையை மீற முயற்சிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளதாக டாக்டர் ரஃபிடா முன்பு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.

எவ்வாறாயினும், இந்த விவகாரத்தை மறுத்த கிளாந்தான் மாநில அரசு, போலீஸ் புகாரைப் பதிவு செய்தது.

“இன்று முதல் நடைமுறைக்கு வருகின்ற போலிச் செய்திகள் அவசரச் சட்டத்தின் கீழ் டாக்டர் ரஃபிடா மீது வழக்குத் தொடரப்படுமா, RM100,000 வரை தண்டம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படுமா?” என்று கிட் சியாங் கேள்வி எழுப்பினார்.

கிளாந்தான் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த போதிலும், கிளாந்தான் மாநிலச் சுகாதாரத் துறையும், மாநில அரசும் மார்ச் 2-ஆம் தேதி ஆரம்பகால கோவிட் -19 தடுப்பூசி பெற்றவர்களின் பட்டியலை மறுசீரமைத்தன.

தடுப்பூசி பெறுபவர்கள் ‘வரிசையை முந்தி செல்கின்றனர்’ என்ற குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர், இந்த மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கலாம் என்று ஓர் ஆதாரம் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுதீன், தகவல் கொடுப்பவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவிட் -19 அல்லது அவசரகாலப் பிரகடனம் தொடர்பான “போலி செய்திகளை” வெளியிடும், பரப்பும் நபர்கள் மீது, போலி செய்திகள் அவசரச் சட்டத்தின் விதிகள் படி, RM100,000 தண்டம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

“போலி செய்திகளை” வெளியிட்டவர் கண்டறியப்பட்டால், அப்பதிவைத் திரும்பப் பெற அவருக்கு 24 மணிநேர அறிவிப்பு வழங்கப்படும் அல்லது RM100,000 தண்டம் விதிக்கப்படும்.