வரவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலில், 18 வயதுடையவர்கள் வாக்களிக்க அனுமதிக்குமாறு அரசியலமைப்பு திருத்தத்தை அமல்படுத்த வேண்டுமென தேசியக் கூட்டணி அரசுக்கு வலியுறுத்தப்படுகிறது.
பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) இளைஞர் பிரிவு தலைவர் ஷஸ்னி முனீர் மொஹமட் இத்னின், 18 வயதுடையவர்கள் வேட்பாளர்களாகப் போட்டியிட முடியும், ஆனால் வாக்களிக்க அனுமதிக்க முடியாது என்பது விசித்திரமாக இருக்கிறது என்றார்.
“18 வயதினர் வாக்களித்தல், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. ஆனால், விசித்திரமான விஷயம் என்னவென்றால் அவர்கள் வேட்பாளர்களாகலாம்.
“இது விசித்திரமானது மற்றும் அசாதாரணமானது, அது நடந்திருக்கக்கூடாது,” என்று செவ்வாயன்று ஒரு நேர்காணலில் மலேசியாகினியிடம் ஷஸ்னி கூறினார்.
2019-ஆம் ஆண்டில், வாக்களிக்கும் வயதையும் தேர்தல் வேட்பாளராக இருக்கும் வயதையும் 18 ஆண்டுகளாகக் குறைப்பதற்கான திருத்தங்களை மக்களவை ஏகமனதாக ஆதரித்தது. திருத்தம் செய்யப்படுவதற்கு முன்னர், நாட்டில் வாக்காளர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆகும்.
இந்தத் திருத்தம் தானியங்கி தேர்தல் பதிவையும் சாத்தியமாக்குகிறது.
இந்தத் திருத்தம் பின்னர் செப்டம்பர் 10-ம் தேதி வர்த்தமானி செய்யப்பட்டது.
3 மாதங்களுக்கு முன்பு, பிரதமர் திணைக்கள அமைச்சர் தக்கியுதீன் ஹசான், வாக்களிப்பு 18 மற்றும் தானியங்கி வாக்காளர் பதிவு, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியிருந்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஷஸ்னி, திருத்தத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட அரசாங்கத்திற்கு எந்தக் காரணமும் இல்லை; எனவே, அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.
“ஒருவேளை 18 வயதுடையவர்கள் அவர்களை ஆதரிப்பார்களா என்று அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் என் கருத்துப்படி நாம் சுயநலமாக இருக்கக்கூடாது,” என்றார் அவர்.