‘பாஸ் ஒரு ‘விபச்சாரி’ போன்றது, ஜிஇ15-ல் அம்னோ போராட வேண்டும்’ – கு லி

மூத்த அம்னோ தலைவர் தெங்கு ரஸாலீ ஹம்ஸா, பாஸ்-ஐ ஓர் “அரசியல் விபச்சாரி” என்று கூறியதோடு, அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜி.இ) தோற்கடிக்கப்பட வேண்டிய ஒரு கட்சி என்றார்.

அண்மையில் தி மலேசிய இன்சைட்-க்கு அளித்த பேட்டியில், 12 தவணைகள் குவா முசாங் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், முந்தைய இடைத்தேர்தல்களில் பாஸ் எடுத்த நடவடிக்கைகள் மூலம், அக்கட்சியை நம்ப முடியாது என்பதை நிரூபித்ததாகக் கூறினார்.

“தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில் அவர்கள் எங்களுடன் இருந்தபோதும், ​​பாஸ் எங்களுக்கு வாக்களிக்கவில்லை, அவர்கள் தஞ்சோங் பியாய்-இல் 3,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தனர், ஆனால் 1,000-க்கும் குறைவானவர்களே எங்களுக்கு வாக்களித்தனர். அவர்கள் நேர்மையான பங்காளிகள் அல்ல. செமிஞ்சேயிலும் இதுவே நடந்தது.

“பாஸ் ஒரு விபச்சாரியைப் போன்றது, சிறிது காலம் டிஏபி (ஆதரிக்கும்), சிறிது காலம் செமாங்காட் 46,” என்று முன்னாள் செமங்காட் 46 தலைவருமான அவர் கூறினார்; 1980-களின் பிற்பகுதியில், 1996-ஆம் ஆண்டில் அம்னோவில் சேரத் திரும்புவதற்கு முன்பு அவர் வழிநடத்திய கட்சியைக் குறிப்பிட்டார்.

பாஸ் அம்னோவைத் துன்புறுத்துவது ஒரு புதிய விஷயம் அல்ல என்று கு லி கூறினார்.

“நாங்கள் நீண்ட காலமாகப் பாஸ்-க்கு எதிராக இருக்கிறோம். இது நேற்று மட்டுமல்ல, 1951 முதல், பாஸ் அம்னோவைச் சீர்குலைத்து வருகிறது, இது ஒரு புதிய விஷயம் அல்ல,” என்று அவர் கூறினார்.

எனவே, அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோவிற்கும் பாஸ்-க்கும் இடையிலான ஒத்துழைப்பு பற்றிய யோசனையையும் கு லி நிராகரித்தார்.

“அடுத்தப் பொதுத் தேர்தலில், பாஸ்-க்கு எதிராகப் போட்டியிடுவதை நான் ஆதரிக்கிறேன்,” என்று அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவரான அவர் கூறினார்.

ஜிஇ15-இல் பெர்சத்து கட்சியை அம்னோ எதிர்க்கும் என்று முன்பு அறிவித்திருந்தது.

இருப்பினும், இரு கட்சிகளுக்கும் இடையிலான மோதல்களைத் தவிர்ப்பதற்காக, பாஸ் உடனான இருக்கை பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் அஹ்மத் மஸ்லான் புதன்கிழமை தெரிவித்தார்.

‘குவா முசாங்கில், பெர்சத்துவுக்கு 5 உறுப்பினர்கள் மட்டுமே’

மேலும், அடுத்தப் பொதுத் தேர்தலில் அம்னோ தனது இடங்களைப் பெர்சத்துவுக்கு வழங்காது என்றும் கு லி வலியுறுத்தினார்.

“பெர்சத்து புதியக் கட்சி, அதற்கு பின்தொடர்பவர்கள் இல்லை. குவா முசாங்கில் அவர்களிடம் நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.

“பெர்சத்து பொதுச்செயலாளர், ஹம்சா ஜைனுதீனுக்கும் இடம் இல்லை, நாங்கள் அவரை லாரூட்டில் போட்டியிட வைக்கவுள்ளோம், ஏனெனில் அவர் ஈப்போவில் போட்டியிட முடியாது.

“பெர்சத்துவுடன் போட்டியிடுவது, பாஸ்-ஐ விட எளிதானது, ஆனால் பாஸ் அவர்களுக்கு உதவ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், அம்னோவும் உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

“அம்னோ உதவி செய்தால், அது எளிதாக இருக்கும் (பெர்சத்துவுக்கு), ஆனால் நாங்கள் துரோகிகளுக்கு உதவுவோம் என்று நான் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பெர்சத்து தலைவர் வான் சைபுல் வான் ஜான், பாஸ்-ஐ ‘விபச்சாரி’ என்று அழைக்கும் அளவுக்கு, கு லி ஏன் மோசமான சொல்லைப் பயன்படுத்தினார் என்று கேள்வி எழுப்பினார்.

“இது நல்லதல்ல. நிச்சயமாக, இது பலரைப் புண்படுத்தும்.

“நாம் கொண்டு வர வேண்டிய அரசியல், ஆரோக்கியமான மற்றும் நாகரிக அரசியல். ‘விபச்சாரி’ என்ற பட்டத்தை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது,” என்று அவர் இன்று ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.