மூன்றாவது சக்தியாக இருப்பது கடினம், நாடாளுமன்றம் திரும்ப பி.என்.-உடன் இணைந்தோம் – லாவ்

மூன்றாவது அரசியல் சக்தியாக தாக்கத்தை ஏற்படுத்துவது கடினம் என்பதை உணர்ந்த கெராக்கான் தேசியக் கூட்டணியில் (பி.என்.) சேர முடிவு செய்தது என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.

நவம்பர் 2019-ல், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில், தனது வேட்பாளர் வைப்புத்தொகையை இழந்தபோது இது நிரூபிக்கப்பட்டது என்ற லாவ், அதனால்தான் பி.என்.-உடன் இணைந்து பணிபுரியும் நிலைமை ஏற்பட்டது என்றார்.

ஒரு கட்டத்தில், பி.என்-ஐ ஒரு ‘பின் கதவு’ அரசாங்கம் என்று விமர்சித்த போதிலும், 2020, மே மாதத்தில் கெராக்கான் பி.என்-க்கு தனது ஆதரவை அறிவித்து, மூன்று மாதங்களுக்குப் பிறகு அக்கூட்டணியில் சேர விண்ணப்பித்தது.

கெராக்கானின் விண்ணப்பத்திற்குக் கடந்த மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாளைய வருடாந்திர பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, சீன மொழி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், 2008 முதல் இருண்ட நிலையில் இருக்கும் கெராக்கான், அடுத்த பொதுத் தேர்தலில் (ஜி.இ.) நாடாளுமன்றத்திற்கும் மாநிலச் சட்டமன்றத்திற்கும் திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றார்.

2003 மற்றும் 2008-ஆம் ஆண்டுகளில், பினாங்கு மாநில அரசாங்கத்தை நிர்வகித்ததோடு, கூடுதலாக 10 நாடாளுமன்ற இடங்களையும் 30 சட்டமன்ற இடங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோது கெராக்கான் உச்சத்தில் இருந்தது.

அவர்கள் 2018 ஜிஇ-யில் எந்த இடங்களையும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“2018 முதல் 2019 வரை, நாங்கள் தேசிய முன்னணியை விட்டு வெளியேறியபோது, ​​எங்கள் கட்சியை மக்களுக்கு ஒரு மாற்றாக நாங்கள் ஊக்குவித்தோம்.

“ஆனால், தஞ்சோங் பியாய் இடைத்தேர்தலில், மக்கள் மூன்றாவது அணியை ஏற்கத் தயாராக இல்லை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.

“இந்த நேரத்தில், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி ஆகிய இரு அரசியல் கூட்டணிகளுடன் கெராக்கான் தொடர்ந்து போராடினால், நாங்கள் வெல்ல முடியாது,” என்று அவர் வெளிப்படையாகக் கூறினார்.

தேசியக் கூட்டணியில் சேருவதற்கான முடிவு, சில தலைவர்கள் மற்றும் அடிமட்ட மக்களிடையேக் கவலையை எழுப்பியது என்பதையும் லா ஒப்புக் கொண்டார், அவர்கள் தங்கள் ஆதரவாளர்கள் இதனை வரவேற்க மாட்டார்கள் என்று அவர்கள் அஞ்சினர்.

இருப்பினும், இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுள்ளது என்றார்.

“எங்கள் உறுப்பினர்களுக்கு நாங்கள் இந்த முடிவுகள் குறித்து விளக்கமளித்து விட்டோம். எங்களை மூன்றாவது சக்தியாக உருவாக்க நாங்கள் எடுத்த முயற்சிகளையும் எங்கள் உறுப்பினர்கள் பார்த்துள்ளனர்.

“வரவிருக்கும் ஜிஇ-ஐ எதிர்கொள்ள, ஒரு கூட்டணியில் நாம் ஏன் சேர வேண்டும் என்பது கிட்டத்தட்ட அனைவருக்கும் இப்போது புரிகிறது,” என்று அவர் கூறினார்.

‘பிரதமர் வேலை செய்கிறார், பேச்சு மட்டுமில்லை’

பிரதமர் முஹைதீன் யாசின், கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில், மக்கள் மற்றும் வணிகத்தின் நலன்களை அரசியலுக்கு மேலாக வைத்துள்ளார், எனவே தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கெராக்கான் ஆதரிக்கிறது என்று லாவ் வலியுறுத்தினார்.

“அவர் சொன்னதைவிட அதிகமாக செய்கிறார். அவர் அரசியல் பற்றி அதிகம் பேசவில்லை. தொற்றுநோயையும் அதன் விளைவுகளையும் சமாளிப்பதற்கான முயற்சிகளை நாம் காணலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

மலாய்-முஸ்லீம் பெரும்பான்மையின் கூட்டணியாக இருக்கும் தேசியக் கூட்டணி, கெராக்கானை அங்கீகரிப்பதற்கு முக்கியக் காரணம் நாம் பல்லின உறுப்பினர்களைக் கொண்டிருப்பதுதான் என்றும் லாவ் நம்புகிறார்.

“பி.என்-ஐ பல்வகைப்படுத்த வேண்டுமென்றும், அதைப் பல-இன, பல-சார்பு மற்றும் பல கலாச்சாரக் கலவையாக மாற்ற வேண்டுமென்றும் எங்கள் கலந்துரையாடல்களின் போது, ​​பிரதமரிடம் நான் சொன்னேன்,” என அவர் மேலும் சொன்னார்.

கட்சியும், அஸ்மின் அலி உள்ளிட்ட பிற பிஎன் தலைவர்களும் கெராக்கானின் பங்கேற்பை வரவேற்றதாக லாவ் கூறினார்.