பி.கே.ஆர். உதவித் தலைவர் கட்சியை விட்டு வெளியேறுகிறார், பி.என்.-னுக்கு ஆதரவு

பி.கே.ஆர். உதவித் தலைவர் சேவியர் ஜெயக்குமார், 1998 முதல் தான் இணைந்திருந்த கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.

கோல லங்காட் எம்.பி.யான அவர், நாடாளுமன்றத்தில் சுயாதீன உறுப்பினராக இருப்பதாகவும், தேசியக் கூட்டணி (பி.என்.) அரசாங்கத்தை ஆதரிப்பதாகவும் அறிவித்தார்.

“நான் எனது தொகுதியில் தொடர்ந்து பணியாற்றுவேன், நாடாளுமன்றத்தின் சுயாதீன உறுப்பினராக அரசாங்கத்தை ஆதரிப்பேன், கோல லங்காட் மக்களுக்கு எனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு பி.கே.ஆர். எம்.பி.க்கள், லேரி ஸ்ங் (ஜுலாவ்) மற்றும் ஸ்டீவன் சோங் (தெப்ராவ்) ஆகியோர் பிப்ரவரி இறுதியில் கட்சியை விட்டு வெளியேறியதை அடுத்து இது நடந்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் வென்ற 47 இடங்களுடன் ஒப்பிடும்போது, ​​பி.கே.ஆர். இப்போது 35 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பதைக் காண்கிறது.

முன்னதாக, தங்கள் எம்.பி.க்களின் ஆதரவை மாற்ற, பரிசுகளை வழங்கி ‘தூண்டில்’ போடும் முயற்சிகள் நடைபெறுவதாக பி.கே.ஆர். கூறியிருந்தது.

பேராக் பி.கே.ஆர். துணைத் தலைவர் எம்.ஏ.தினகரனை – அவருக்கு நன்கு அறிமுகமான – எம்.ஏ.சி.சி. கைது செய்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 17 அன்று, சேவியர் தன் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.  .

பி.கே.ஆர். கட்சியிடம் ஏமாற்றம்

இன்று ஓர் அறிக்கையில், சேவியர் கடந்த ஆண்டு கட்சியின் நடவடிக்கைகளில் “மிகவும் ஏமாற்றமடைந்தேன்” என்று கூறியுள்ளார், இது பி.கே.ஆரை விட்டு வெளியேற முடிவு செய்யத் தூண்டியது.

கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதாரத்தை மறுவடிவமைப்பதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதே இப்போது தனது முன்னுரிமை என்றார்.

தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த குறைந்தபட்சம் 18 மாதங்கள் தேவை என்றும், பொருளாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகும் என்றும் அவர் கூறினார்.

“அரசாங்க முயற்சிகள் நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்த இதற்கு இருதரப்பு ஆதரவுகள் தேவை.

“மக்கள் நிலைதன்மையையும், நோய்வாய்ப்பட்ட பொருளாதாரத் துறையை மீட்டெடுக்கவும் விரும்புகிறார்கள். இதற்காக நாம் ஒருவருக்கொருவர் எதிர்க்காமல் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

1998-ல், பார்ட்டி கெஅடிலான் நேஷனல் என்று பெயர் சூட்டப்பட்ட காலம் முதல் சேவியர் பி.கே.ஆரில் உறுப்பினராக உள்ளார்.

அப்போதிருந்து, அரசியலில் அவர் பிரகாசித்து வந்தார். பி.கே.ஆர். தேர்தலின் போது, அப்போதையத் துணைத் தலைவரான அஸ்மின் அலி அணியினருக்கு ஆதரவளித்து, உதவித் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அஸ்மினும் அவரது ஆதரவாளர்களும் பெர்சத்துவில் சேருவதற்கு முன்பு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் பி.கே.ஆரை விட்டு வெளியேறினர்.