15-வது பொதுத் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், கட்சியின் “பாரம்பரிய இடங்கள்” என்ற கருத்து கெராக்கானுக்கு இனி இருக்காது என்று அதன் தலைவர் டொமினிக் லாவ் கூறினார்.
இன்று, கட்சியின் 49-வது ஆண்டு தேசிய மாநாட்டில் கொள்கை உரையாற்றிய அவர், நாட்டின் அரசியல் நிலைமை மாறிவிட்டதாகவும், கெராக்கான் அதற்கேற்ப சரியாக வேண்டியது அவசியம் என்றும் லாவ் கூறினார்.
“எந்தவொரு கட்சிக்கும் பாரம்பரிய இடங்கள் அல்லது பாரம்பரிய தொகுதிகள் என்றக் கருத்தை மறக்க வேண்டுமென உறுப்பினர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன்.
“பாரம்பரிய இடங்கள் இல்லை. இனி யாரும் ‘தை கோ’ (பெரிய அண்ணன்) இல்லை,” என்றார் லாவ்.
1968-இல் நிறுவப்பட்ட இக்கட்சி, விரைவாக பல முன்னேற்றங்கள் கண்டு, பினாங்கில் அதிகாரத்தைப் பெற்றது. பின்னாளில், பாரிசான் நேஷனல் (பி.என்.) என மறுபெயரிடப்பட்ட பெரிக்காத்தானில், 1972-ம் ஆண்டு இணைந்தது.
பி.என். கூட்டணி உறுப்பினராக, இது பெரும்பாலும் பினாங்கில் பல வெற்றிகளைக் குவிந்துள்ளது, ஆனால் தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையிலும் இக்கட்சிக்குப் பல இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2018 பொதுத் தேர்தலின் போது, கெராக்கான் ஓர் இடத்தைக்கூட வெல்லாமல் மோசமாக தோற்றது. இதன் விளைவாக, கட்சி பி.என்-ஐ விட்டு வெளியேறி, இவ்வாண்டு பிப்ரவரியில் தேசியக் கூட்டணியில் இணைந்தது.
கெராக்கான் இப்போது தேசியக் கூட்டணி குடையின் கீழ் இருந்தாலும், ஜிஇ-க்குப் பிறகு ஏற்படக்கூடிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள கட்சி உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று லாவ் எச்சரித்தார்.
“கூட்டணி கட்சிகள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவதை நாம் காணலாம், அல்லது ஒரு புதியக் கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்படலாம்.
“அரசியலில், எதுவும் நடக்கலாம் … எனவே நண்பர்களே, நீங்கள் எல்லா சாத்தியங்களுக்கும் தயாராக இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
தேசியக் கூட்டணியில் சேர, கட்சி எடுத்த முடிவு குறித்து இன்னும் சிலர் சந்தேகம் கொண்டிருப்பதைத் தான் அறிந்திருப்பதாக லாவ் கூறினார்.
எவ்வாறாயினும், கட்சித் தலைமையுடன் ஆலோசனை நடத்தி, தற்போதைய அரசியல் நிலைமையைக் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதியளித்தார்.
தேசியக் கூட்டணி மற்ற கூட்டணிகளைப் போல இல்லை என்ற அவர், பி.எச். கூட்டணிக்கு ஒரே ஒரு குறிக்கோள் மட்டுமே உள்ளது, பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமைப் பிரதமராக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்று அவர் மேலும் கூறினார்.
“அவர்கள் மக்கள் நலனைப் பற்றி கவலைப்படுவதில்லை. பி.எச்.-இன் பார்வை ‘வலுவானது மற்றும் உறுதியானது’ – அவர்கள் பிரதமர் இருக்கையில் அமர விரும்புகிறார்கள்.
“மறுபுறம், பேராசை மற்றும் சக்தி வாய்ந்த கட்சிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றுவதே தேசியக் கூட்டணியின் குறிக்கோள். மக்கள் நலனுக்காகவும், அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கும் சிறந்த தேர்வாகத் தேசியக் கூட்டணி இருக்கும்.
“தேசியக் கூட்டணியில் எந்த ஊழலும் இல்லை, வம்சாவளியினரின் ஆதிக்கம் இல்லை, பழைய முகங்களும் இல்லை,” என்று அவர் மேலும் கூறினார்.