சேவியர் ஜெயக்குமார் பி.கே.ஆரை விட்டு வெளியேறி, தேசியக் கூட்டணியை (பி.என்) ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினராக மாற எடுத்த முடிவு, பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்று பி.கே.ஆர், தலைமைச் செயலாளர் சைஃபுட்டின் நாசுதியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
“அவரை நீண்ட காலமாக அறிந்த ஒருவர் என்ற முறையில், இன்றைய அறிக்கையில் அவரது செயல்களும் காரணங்களும் பல்வேறு கேள்விக்குறிகளை எழுப்புகின்றன. ஆயினும் ஓர் உண்மையான சீர்திருத்தவாதியை இன்னொருவரிடமிருந்து வேறுபடுத்துவது என்னவென்றால், எந்நேரத்திலும் எதிர்கொள்ளும் சோதனைகளைத் தாங்கிக்கொள்வதுதான்.
“அனைத்து பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறுதியானவர்களாகவும், நிலையானவர்களாகவும் சீர்திருத்தப் போராட்டத்தின் கொள்கைகளையும் பாதையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
முன்னதாக, பி.கே.ஆர். உதவித் தலைவராக இருந்த சேவியர், கட்சியை விட்டு வெளியேறி, ஒரு சுயாதீன எம்.பி.யாக, தேசியக் கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்தார்.
கடந்த ஆண்டு முதல், கட்சியின் செய்லபாடுகளில் தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், தற்போது கோவிட் -19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
சைஃபுட்டினின் கூற்றுப்படி, எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆதரவை ஈர்க்க பி.என். “அச்சுறுத்தி” வருகிறது என எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரே, சேவியரின் இந்த முடிவு நடந்துள்ளது.
“சமீபத்தில், சேவியர் பி.கே.ஆர். தலைமையைச் சந்தித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) ஓர் அரசியல் செயலாளர், தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அவரது அறிமுகமான சிலரைத் தடுத்து வைத்திருந்த வழக்கு தொடர்பில், தன்னை விசாரணைக்கு அழைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
“சேவியரை ஒரு மூத்த அமைச்சர் தொடர்புகொண்டு, அவர் பி.என்-ஐ ஆதரிக்க வேண்டும் அல்லது கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்,” என்று சைஃபுட்டின் சொன்னார்.
மேலும் கருத்தறிய, மலேசியாகினி எம்.ஏ.சி.சி. மற்றும் சேவியரைத் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது.