சிவராசா : எம்.ஏ.சி.சி.-யின் அழுத்தம் இல்லையென்றால், சேவியரின் கட்சிதாவல் நடந்திருக்காது

கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தை ஆதரிப்பதற்கான நடவடிக்கை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) அழுத்தம் காரணமாகவே நடந்தேறியது எனப் பி.கே.ஆர். எம்.பி. சிவராசா இராசையா குற்றஞ்சாட்டினார்.

“அவரை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட எம்.ஏ.சி.சி. விசாரணை இல்லாதிருந்தால், டாக்டர் சேவியர் ஜெயக்குமார் அத்தகைய நடவடிக்கையை எடுத்திருக்க மாட்டார் என்பது மிகவும் தெளிவாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

சிவராசா மற்றும் சேவியர் இருவரும், 2018 பி.கே.ஆர். கட்சி தேர்தலில் அஸ்மின் அலியின் முகாமில் இருந்தனர்.

“பிஎன் தனக்கான ஆதரவை வலுபடுத்த, எம்.ஏ.சி.சி. போன்ற அரசாங்க நிறுவனங்களைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்களை அச்சுறுத்தியும் அழுத்தம் கொடுத்தும் வருகிறது, இதனை பிஎன் உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று அவர் கூறினார்.

கடந்த மாதம், சேவியரின் “குடும்ப அறிமுகமான”, எம்.ஏ.தினகரனை எம்.ஏ.சி.சி கைது செய்தது.

தற்போது அவரின் அரசியல் செயலாளர், தனிப்பட்ட உதவியாளர் மற்றும் அவருக்குத் தெரிந்த சிலரை எம்.ஏ.சி.சி. தடுத்து வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எம்.ஏ.சி.சி. தலைமை ஆணையர் அசாம் பாக்கியின் கருத்துப்படி, சேவியர் தானே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

முன்னதாக, எம்.ஏ.சி.சி. ‘அரசியல் ஆயுதமாக’ பயன்படுத்தப்படுகிறது எனும் பல அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை அந்நிறுவனம் கடுமையாக மறுத்தது.

“அக்குற்றச்சாட்டு ஆதாரமற்றது மற்றும் பொறுப்பற்றது என்றும், இது எம்.ஏ.சி.சி.-யின் பிம்பத்தைப் பாதிப்பதோடு, சமூகத்தில் எதிர்மறையான கருத்தை உருவாக்கக்கூடும்,” என்றும் மார்ச் 6-ம் தேதி அதன் ஆணையர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.