மின் இரயில் சேவை (இதிஎஸ்) பயனர்கள், இந்த ஏப்ரல் முதல் மலேசிய விடுமுறை விளம்பரப் பிரச்சாரத்தின் கீழ் (Cuti-Cuti Malaysia), ஒவ்வொரு டிக்கெட்டிற்கும் RM10 தள்ளுபடியை அனுபவிக்க முடியும்.
சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சுடன் (மோதாக் – MOTAC) இணைந்து, இந்தப் பிரச்சாரம் மூன்று மாதங்கள் ஏப்ரல் முதல் ஜூன் 30 வரை நடைபெறும் என்று மலாயா இரயில் சேவை நிறுவனமான கே.தி.எம்.பி. தெரிவித்துள்ளது.
“இந்தப் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு இணங்க, 2021 ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30 வரை பயணத்திற்கான இதிஎஸ் சேவைகளுக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 15, நாளை முதல் திறந்திருக்கும் என்பதை கே.தி.எம்.பி. தெரிவித்துக் கொள்கிறது.
“அரசாங்கத்தின் தற்போதைய அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு, மாநிலத்தில் விடுமுறைக்கான ஆரம்ப திட்டங்களைப் பொதுமக்கள் செய்வதற்கு ஏதுவாக டிக்கெட் விற்பனை திறந்திருக்கும்,” என்று இன்று கே.டி.எம்.பி. அறிவித்தது.
இருப்பினும், கே.டி.எம்.பி. மொபைல் (KTMB Mobile – KITS) பயன்பாடு அல்லது கே.டி.எம்.பி. வலைத்தளம் மூலம் டிக்கெட் வாங்கும் பயனர்களால் மட்டுமே இந்தத் தள்ளுபடியை அனுபவிக்க முடியும்.
கோவிட்-19 தொற்றைத் தொடர்ந்து, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப இயங்கலை பயன்பாட்டை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது இந்த நடவடிக்கை, என்று கே.டி.எம்.பி. கூறியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, இப்பிரச்சாரத்தின் கீழ், தள்ளுபடி ஊக்குவிப்பு எதிர்காலத்தில் இன்டர்சிட்டி கேடிஎம் சேவைகளுக்கும் விரிவாக்கப்படும்.
- பெர்னாமா