‘போலி செய்திகளுக்கு எதிராக உண்மையைக் காட்டி போராடுங்கள், சட்டத்தைக் காட்டியல்ல’

கோவிட் -19 தொற்று மற்றும் அவசரகாலப் பிரகடனங்கள் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்து பரவும் தவறான தகவல்களைக் கையாள உண்மைகளை பயன்படுத்த வேண்டும், சட்டத்தை அல்ல என்று பேச்சு சுதந்திரத்தை மையமாகக் கொண்ட சிவில் சமூக அமைப்புகளின் கூட்டணி தெரிவித்துள்ளது.

நாட்டின் சமநிலை செயல்முறையை உறுதி செய்ய, நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு வலியுறுத்தி, சுமார் 20 பேர் கொண்ட குழு ஒன்று, அவசர (அத்தியாவசிய அதிகாரங்கள்) சட்டம் (எண் 2) 2021-ஐ எதிர்த்து இன்று அமைதியான முறையில் ஒன்று கூடியிருந்தனர்.

நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே கூடிய இந்தக் குழு, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, தங்கள் செய்தியை அரசாங்கத்திற்கு தெரிவிக்க கைகளில் தட்டிகளை ஏந்தியிருதனர்.

குழுவின் செய்தித் தொடர்பாளர்களான, வத்சலா நாயுடு மற்றும் ஜாக் எஸ்.எம். கீ ஆகியோர் குழுவின் கோரிக்கைகளை வாசித்து, நாடாளுமன்றக் கூட்டத்தொடரை உடனடியாக நடத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய கீ, கோவிட் -19 மற்றும் அவசரகால அறிவிப்பு தொடர்பான தவறான தகவல்களைத் தடுப்பதற்கான அச்சட்டத்தின் விளக்கம் மிகவும் விரிவானது என்றார்.

“இது அனைத்து வகையான பேச்சுகளையும் மௌனமாக்க, அதிகாரத்தில் உள்ளவர்களால் பயன்படுத்தப்படலாம்,” என்று டிஜிட்டல் உரிமை ஆர்வலரான அவர் கூறினார்.

அவசரகாலம் எப்போது நீக்கப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை என்று வத்சலா கூறினார்.

“ஒரு வருடமாக நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளைதான் நாம் காண்கிறோம்.

“ஆகஸ்ட் மாதத்தில் காலாவதியாகும் என்று அரசாங்கம் கூறினாலும், அது காலாவதியாகும் என்று நமக்கு உத்தரவாதம் அளிக்கப்படவில்லை,” என்று அவர் கூறினார்.

இச்சட்டத்தின் கீழ், மக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் தகவல் சுதந்திரத்திற்கான உரிமையைக் கட்டுப்படுத்துவதைத் தற்போதைய சம்பவங்கள் காட்டுகின்றன.

“அதிகமான சட்டங்களை நிறுவுவது மக்களுக்குக் கடினமாகிவிடும், மேலும் சரியான முடிவுகளை எடுக்க அதிகமான உண்மை தகவல்கள் நமக்குத் தேவை.

“மக்களை மௌனமாக்க இதுபோன்ற சட்டங்களை அரசாங்கம் பயன்படுத்தினால், தகவல் ஒரு வழி விளக்கமாக மட்டுமே இருக்கும், எனவே அதன் துல்லியத்தை நாம் எவ்வாறு தீர்மானிக்க முடியும்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.