பேராக் டிஏபி தேர்தலில், உறவினர்களான ங்கா கோர் மிங் மற்றும் ங்கே கூ ஹாம் அணி அனைத்து பதவிகளையும் வென்றது.
முன்னதாக, முன்னாள் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன் மற்றும் கம்பார் எம்.பி. தாமஸ் சு அணியினர், தேர்தலின் போது ‘ஆவி வாக்காளர்கள்’ இருந்ததாகக் கூறினர்.
மாநில டிஏபி செயற்குழுவிற்கு நேற்று நடைபெற்ற அனைத்து 15 பதவிகளுக்குமான போட்டியில் ங்கா-ங்கே அணி வெற்றி பெற்றது.
ங்கா மற்றும் பத்து காஜா எம்.பி. வி சிவக்குமார் தலா 1,228 வாக்குகளைப் பெற்றனர், தைப்பிங் எம்.பி. தெஹ் கோக் லிம் 1,102 வாக்குகளுடன் 15-வது இடத்தைப் பிடித்தார்.
1,216 வாக்குகளுடன் ங்கே ஆறாவது இடத்தில் இருந்தார். இதற்கிடையில், தெபிங் திங்கி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் பாரி 1,224 வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
மொத்தம் 1,735 வாக்குச் சீட்டுகள் தேர்தலின் போது வழங்கப்பட்டன.
ங்கா-ங்கே முகாமை எதிர்த்த குலா-சு முறையே 540 மற்றும் 550 வாக்குகள் பெற்றனர்.
முன்னதாக, குலா-சு அணி, தேர்தலைக் கையாண்ட குழு, பதிவு நேரம் முடிந்திருந்தாலும், மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு பிரதிநிதிகளைக் கேட்டுக்கொண்டதாகக் கூறியது.
கணினியில் அச்சிடப்பட்ட அடையாள அட்டைக்குப் பதிலாக, ஒரு சில பிரதிநிதிகள் கையால் எழுதப்பட்ட பெயர் அட்டைகளை அணிந்திருந்ததாகவும் அவர்கள் கூறினர்.
நேற்று பிற்பகல் 1 மணியளவில், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், குலசேகரன் மற்றும் சு ஆகியோருடன் வாக்களிப்பு செயல்முறை தொடர்பான சர்ச்சைகளைப் பற்றி விவாதிக்க ஒரு சந்திப்பை நடத்தியதை மலேசியாகினிக்குத் தெரியவந்தது.
மதியம் 12.35 மணியளவில், கலந்துரையாட மாநாட்டு மையத்தில் உள்ள வி.ஐ.பி. அறைக்குள் நுழையுமாறு இரண்டு எம்.பி.க்களையும் லிம் கேட்டுக்கொண்டார்.
இது சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது. இருப்பினும், குலசேகரன் ஊடகங்களுக்கு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை, அதே நேரத்தில் கட்சி தேர்தல் நியாயமானதாகவும் வெளிப்படையானதாகவும் இருக்கும் என்று தான் நம்புவதாக சு கூறினார்.
மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, சு மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.