ஒரு மூத்த அம்னோ எம்.பி.யால், “அரசியல் விபச்சாரி” என்று முத்திரை குத்தப்பட்டதை அடுத்து, தங்கள் கட்சியை மதிப்பிடும் பொறுப்பை மக்களிடம் விட்டுவிடுவதாகப் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறினார்.
நிருபர்கள் கேட்டபோது, மேலும் கருத்து தெரிவிக்க மறுத்த அப்துல் ஹாடி : “இதற்குத் தீர்ப்பளிக்க வேண்டியது பொதுமக்கள் தான்,” என்று வெறுமனே கூறினார்.
தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அடையாளத்தைப் பற்றி பாஸ் கவலைப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார், ஏனென்றால் கட்சி, அது நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுடன் தொடர்கிறது.
“அது அவர்களைப் பொறுத்தது, எங்களுக்கு ஒரு பெயரைக் கொடுக்க விரும்புகிறார்கள், அவர்கள் எதைச் சொன்னாலும், எங்கள் வேலையை நாங்கள் தொடர்ந்து செய்வோம்,” என்று கோல திரெங்கானு, செண்டரிங் சுகாதார கிளினிக்கில் கோவிட் -19 தடுப்பூசி ஊசி பெற்ற பின்னர் அவர் கூறினார்.
கடந்த மார்ச் 12-ல், அம்னோ ஆலோசனைக் குழுவின் தலைவர் தெங்கு ரஸலீ ஹம்ஸா பாஸ் கட்சியை “அரசியல் விபச்சாரி” என்றும், அடுத்தப் பொதுத் தேர்தலில் (ஜிஇ) தோற்கடிக்க வேண்டிய கட்சி என்றும் சொன்னார்.
முந்தைய இடைத்தேர்தல்களில் பாஸ் எடுத்த நடவடிக்கைகள், அக்கட்சியை நம்ப முடியாது என்பதை நிரூபித்ததாக குவா முசாங் எம்.பி. கூறினார்.
“அவர்கள் நேர்மையான பங்காளிகள் அல்ல. தஞ்சோங் பியாய் மற்றும் செமினியில் அவர்கள் தங்கள் சுயரூபத்தைக் காட்டினர்.
“பாஸ் ஒரு விபச்சாரியைப் போன்றது, சிறிது காலம் டிஏபி, சிறிது காலம் செமாங்காட் 46 என தனது ஆதரவை மாற்றிக்கொண்டே இருக்கும்,” என்று அவர் கூறினார்.
பதிவைப் பொறுத்தவரை தெங்கு ரஸாலி பாஸ்-க்குப் புதியவரல்ல. செமாங்காட் 46 கட்சியை வழிநடத்தும் போது, அவர் பல ஆண்டுகளாக பாஸ்-உடன் பணிபுரிந்துள்ளார்.
அந்த ஒத்துழைப்பினாலேயே, 1990-ல் அவர்கள் கூட்டணி கிளாந்தானைக் கைப்பற்றியது. அப்போதிருந்து, கிளாந்தான் பாஸ் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது, அதே நேரத்தில் செமாங்காட் கலைக்கப்பட்டது.
“நாங்கள் உம்மாவை ஒன்றிணைக்க விரும்புகிறோம். இந்த உம்மா முதலில் முஸ்லிம்கள், இரண்டாவதுதான் மனிதர்கள்.
“நாங்கள் ஒன்றிணைக்க விரும்புகிறோம், எது தீவிரமானதோ அதை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த உம்மா என்பது பாஸ் மற்றும் அம்னோ மட்டுமல்ல, அனைத்தையும் ஒரே நேரத்தில் ஒன்றிணைக்க விரும்புகிறோம்,” என்று ஹாடி மேலும் கூறினார்.