கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பி.கே.ஆரை விட்டு வெளியேறி, தேசியக் கூட்டணிக்கு (பி.என்) ஆதரவளிப்பதற்கான முடிவை ஆதரிக்கும் பல வாதங்கள் குறித்து அம்னோ தகவல் பிரிவு தலைவர் ஷாரில் ஹம்டான் கேள்விகளை எழுப்பினார்.
குறிப்பாக, பி.கே.ஆர். உதவித் தலைவர் தியான் சுவா மற்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா இராசையா ஆகியோரால், அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாகவே சேவியர் கட்சி மாறினார் என்று குற்றம் சாட்டப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
எம்.ஏ.சி.சி.-யின் “தேர்ந்தெடுக்கப்பட்ட விசாரணை” இல்லாதிருந்தால் சேவியர் கட்சி மாறியிருக்க மாட்டார் என்று சிவராசாவும், பிஎன் அதிகாரத்தில் இருக்க அச்சுறுத்தல்களைப் பயன்படுத்துகிறது என்று சுவாவும் கூறினார்.
“சேவியர் அப்பாவி என்பது உண்மை என்றால், எந்த வகையில் அச்சுறுத்தினாலும், அவர் ஏன் கட்சி தாவ வேண்டும்?
“இப்போது அது கட்சி மாறிவிட்டார், ஆக விசாரணை நிறுத்தப்படுமா?” என்று நேற்றிரவு ஒரு முகநூல் இடுகையில் அவர் கேள்வி எழுப்பினார்.
கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துதல், வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் பொருளாதாரத்தை மறுவடிவமைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பி.என். அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக தனது ஆதரவை வழங்கியதாக சேவியர் கூறினார்.
தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்த குறைந்தபட்சம் 18 மாதங்கள் தேவை என்றும், பொருளாதாரத்தை முழுமையாக மீட்க இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், அம்னோ உதவித் தலைவர் மொஹமட் கலீட் நோர்டின், பி.என்-க்கு ஆதரவான மூன்று பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடவடிக்கை, “பி.என். வீழ்ச்சியை தாமதப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயமே தவிர, அக்கூட்டணியை வலுப்படுத்துவதற்கானது அல்ல,” என்றார்.
“அத்தகைய ஒழுக்கக்கேடான அணுகுமுறையுடன் கட்டமைக்கப்பட்ட எந்த அரசியல் இயக்கமும் உயிர்வாழ முடியாது.
“கடின உழைப்பு மற்றும் போராட்டக் கொள்கைகள் மீதான நம்பிக்கையினால் மட்டுமே அரசியல் இயக்கங்கள் வலுவாகவும் நிலையானதாகவும் இருக்க முடியும்.
“பிஎன் சித்தாந்தம் மற்றும் போராட்டத்தில் தெளிவு இல்லாமல் உருவாக்கப்பட்டது, இது வரை, பக்காத்தான் ஹராப்பானால் ஆட்சி காலத்தைவிட மலேசியா சிறப்பாக இல்லை.
“இவை அனைத்தும் ஒரு திட்டவட்டமான தோல்விக்கான கூறுகள். பிஎன் அதன் ஆயுளை நீடிக்க எவ்வளவு காலம் பாடுபட்டாலும், இறுதியில் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க மக்களிடம் வந்தே ஆக வேண்டும்,” என்று நேற்று இரவு முகநூல் பதிவில் தெரிவித்தார்.
தேசிய முன்னணி, தேசியக் கூட்டணியில் இருந்து விலகி இருப்பது மிகவும் பொருத்தமானது என்று கலீட் விளக்கினார்.
“காரணம், தேசிய முன்னணி மலேசியாவையும் அதன் மக்களையும் காப்பாற்ற விரும்புகிறது, ஆனால் தேசியக் கூட்டணியும் அதன் கூட்டாளிகளும் மலேசியாவிற்கு ஒரு பிரச்சினையாக மாறியுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.