நேற்று, பேராக் டிஏபி 19-வது மாநாட்டில் நடந்த குழப்பத்தில் வாய்மொழி சண்டைகள் மட்டுமே இருந்தன, எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.
ஈப்போ சர்வதேச மாநாட்டு மையத்தில், காலை 11 மணியளவில் நடைபெற்ற மாநாட்டின் போது டிஏபி பிரதிநிதிகளுக்கிடையில் நடந்த வாய்ச்சண்டை சம்பவத்தை ஈப்போ மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏசிபி அஸ்மாடி அப்துல் அஜீஸ் உறுதிப்படுத்தினார்.
அம்மாநாடு ஓர் உள்ளரங்க நிகழ்ச்சி என்றும், அந்நிகழ்ச்சி குறித்து தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
“அம்மாநாடு, தேசியப் பாதுகாப்பு மன்றம் (எம்.கே.என்) கோடிட்டுக் காட்டிய நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி.பி) செந்தர இயங்குதல் நடைமுறையின் (எஸ்ஓபி) கீழ் இருந்தது, மண்டபக் கொள்ளளவில் 50 விழுக்காடும் பி.கே.பி.பி.யிம் எஸ்ஓபி நிபந்தனைகளுக்கு இணங்கியும் அது நடத்தப்பட்டது.
“மாநாட்டு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட குழப்பம், வாய்மொழி சண்டைகள் வடிவில் இருந்தன, எந்தவிதமான அசம்பாவிதங்களும் இல்லாமல் நிலைமை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது,” என்று அவர் இன்று ஈப்போவில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கலவரத்தின்போது பி.கே.பி.பி. எஸ்ஓபி-க்களை மீறியக் குற்றம் தொடர்பாக போலிஸ் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அஸ்மாடி தெரிவித்தார்.
நேற்று, டிஏபி மாநாட்டில் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க, ஆவி வாக்காளர்கள் பயன்படுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுகள் மற்றும் வாக்களிக்கும் காலம் திடீரென நீட்டிக்கப்பட்டது போன்ற காரணங்களால் சில குழப்பங்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- பெர்னாமா