பி.என்-ஐ விட்டு வெளியேறி, மற்ற கூட்டணியில் இணையவுள்ளது எனும் கூற்றை ம.இ.கா. மறுத்தது

தேசிய முன்னணியை (பி.என்.) விட்டு வெளியேறி மற்றொரு அரசியல் முகாமில் சேர கட்சி விரும்புகிறது என்றக் குற்றச்சாட்டுகளை ம.இ.கா. இன்று மறுத்துள்ளது.

அதன் தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன், பி.என்.-உடன் இருப்பதற்கான நிலைப்பாட்டில் கட்சி உறுதியுடன் இருப்பதாகவும், அதே நேரத்தில் அடுத்த 15-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள, பிரதமர் முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணியுடன் தேசிய முன்னணி செயல்பட முடியும் என்று நம்புவதாகவும் கூறினார்.

“நான் உங்களுக்கு வெளிப்படையாகச் சொல்ல விரும்புகிறேன், எந்தவொரு (கூட்டணி) கட்சியிலும் சேருமாறு எங்களிடம் கேட்க வலைகள் அல்லது தூண்டிகள் வீசப்படவில்லை.

“உண்மையில், நாங்கள் தேசிய முன்னணியுடன் இருக்க விரும்புகிறோம், தேசிய முன்னணியும் ஜிஇ15-ல், தேசியக் கூட்டணியுடன் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் இன்று கோலாலம்பூரில் கூறினார்.

அம்னோ-பாஸ் இடையேயான உறவின் உதாரணத்தை எடுத்துக் கொண்டால், தேசிய முன்னணியும் தேசியக் கூட்டணியும் ஒன்றாக இருக்க முடியும் என்று விக்னேஸ்வரன் நம்புகிறார்.

“பாஸ் இப்போது அரசாங்கத்திலும் தேசியக் கூட்டணியிலும் உள்ளது. அம்னோ பாஸ்-உடன் பணிபுரியத் தயாராக உள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 2019 மற்றும் 2020 ம.இ.கா. ஆண்டு பொதுகூட்டம் தொட்டு கேட்டபோது, ஏப்ரல் 3-ஆம் தேதி, கிள்ளானில் நடைபெறும் என்று கூறினார்.

400 பிரதிநிதிகள் நேரடியாகவும், மீதமுள்ள 400 பிரதிநிதிகள் இயங்கலையிலும் கலந்துகொள்வார்கள் என்றும் அவர் விளக்கினார்.

இது தவிர, ஏப்ரல் 5 முதல் மே 5 வரை நடைபெறும் கிளைத் தேர்தலுக்குப் பிறகு, கட்சியின் தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தல் ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் விக்னேஸ்வரன்.

நாட்டின் தற்போதைய நிலைமையைப் பொறுத்து கட்சியின் மற்ற உயர் பதவிகளுக்கான தேர்தல்கள் பின்னர் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

  • பெர்னாமா