கடந்த நவம்பரில், ஆள்பல இலாகா நிர்ணயித்த தரத்தின்படி ஊழியர்களுக்கு தங்குமிடம் வழங்கத் தவறியதற்காக, இரப்பர் கையுறை உற்பத்தியாளர் டோப் க்ளோவ் சென். பெர். நிறுவனத்தின் மீது, இன்று ஈப்போ செஷ்ஷன் நீதிமன்றத்தில் 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி நோராஷிமா காலித் முன்னிலையில், கூறப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் அந்நிறுவனத்தின் இயக்குநர் மறுத்தார்.
வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் பணியாளர் வசதிகள் சட்டம் 1990-இன் குறைந்தபட்ச தரநிலைகள் பிரிவு 24 டி (1)-இன் படி, மனிதவளத் தலைமை இயக்குநரிடமிருந்து, தங்கும் சான்றிதழ் பெறாமலேயே, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு அந்நிறுவனம் தங்குமிடம் வழங்கியதாகக் கூறப்படுகிறது..
கடந்த நவம்பர் 26-ம் தேதி, காலை 9 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையில், ஈப்போ, தாசேக் முத்தியாரா வர்த்தக மையத்தில் 10 வெவ்வேறு தங்குமிடங்களில் இந்தக் குற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வீட்டுவசதி, தங்குமிடம் மற்றும் பணியாளர் வசதிகள் சட்டம் 1990-இன் குறைந்தபட்ச தரநிலைகளின் பிரிவு 24 டி (3)-இன் படி குற்றம் சுமத்தப்பட்டது, இதன்வழி RM50,000-க்கும் மிகாமல் தண்டம் விதிக்கப்படலாம்.
இந்த வழக்கை அரசு துணை வக்கீல்கள் சித்தி ஷகிமா இப்ராஹிம் மற்றும் ஜைஹாஸ் மொஹமட் ஷாகிர் ஹஸ்ஃபர் ஆகியோர் நடத்தினர்.
வழக்கை மறுபரிசீலனை செய்ய நீதிமன்றம் ஏப்ரல் 28-ம் தேதியை நிர்ணயித்துள்ளது.
- பெர்னாமா