‘ஒத்துழைப்பைக் கருத்தில் கொள்ளலாம், ஆனால் அம்னோவுக்குப் பிரதமர் பதவியைக் கொடுங்கள்’

பி.கே.ஆருடன் ஒத்துழைப்பதை அம்னோ பரிசீலிக்க முடியும், ஆனால் பிரதமர் பதவி அம்னோவுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் தேசிய முன்னணி (பி.என்.) தகவல் பிரிவு தலைவர் இஷாம் ஜலீல் கூறினார்.

பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமைப் பிரதமராக நியமிப்பதே குறிக்கோள் என்றால், அடிமட்ட மக்கள் நிச்சயமாக பி.கே.ஆருடனான ஒத்துழைப்பை நிராகரிப்பார்கள் என்று அவர் விளக்கினார்.

“எனது கருத்துபடி, ஒத்துழைப்பில் அவர்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தால், யாருடனும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் இது அம்னோ அடிமட்டத்தினரும் கட்சித் தலைமையும் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தது.

“அன்வாரின் நோக்கம் வெறுமனே அவர் பிரதமராக விரும்புவதால், அம்னோ அடிமட்ட மக்கள் இந்த ஒத்துழைப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.

“எனவே, அன்வர் அம்னோவுடன் இணைந்து பணியாற்ற விரும்பினால், அவரைப் பிரதமராக ஏற்றுக்கொள்ள வேண்டுமென அம்னோவைக் கட்டாயப்படுத்த முடியாது என்ற உண்மையை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 15-வது பொதுத் தேர்தலை (ஜி.இ) எதிர்கொள்வதில் ஒத்துழைப்பு சாத்தியம் குறித்து தனது கட்சிக்கும் அம்னோவிற்கும் இடையே அதிகாரப்பூர்வமற்ற கலந்துரையாடல்கள் நடந்ததாக அன்வர் கூறினார்.

இன்று மாலை 4.30 மணிக்கு, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதாக அன்வர் அறிவித்தார், மேலும் இந்த விவகாரம் தொட்டும் அவர் பேசிவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் கட்சியை விட்டு வெளியேறிய சில பி.கே.ஆர். எம்.பி.-களின் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.