சில பி.கே.ஆர். எம்.பி.க்கள் இப்போது முஹைதீன் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி (பி.என்) அரசாங்கத்தை ஆதரித்தாலும், அவர்களுக்கு இன்னும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்று பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறினார்.
சிலர் எதிர்பார்த்தபடி பி.என். அரசாங்கத்திற்கு, 110 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.
உண்மையில், பி.என். ஐந்து அல்லது ஆறு எதிர்க்கட்சி எம்.பி.க்களை ஈர்க்க முடிந்தாலும், அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்று அவர் கூறினார்.
“இது மிகவும் தெளிவாக உள்ளது, நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று அவர் இன்று பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மார்ச் 13 அன்று, கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் பி.கே.ஆரை விட்டு விலகி, பி.என்.னுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்தார்.
பி.கே.ஆரைச் சேர்ந்த மற்ற இரண்டு எம்.பி.க்கள் – லாரி ஸ்ங் (ஜூலாவ்) மற்றும் ஸ்டீவன் சோங் (தெப்ராவ்) – முன்னதாக கட்சி விலகியது குறிப்பிடத்தக்கது.