சுங்கை பெட்டாணியில் கோயில் உடைப்பைத் தள்ளிவைக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்

சுங்கை பெட்டாணி, ஜாலான் அவாமில் உள்ள ஒரு கோயில் உடைபடும் நிலையில் உள்ளது. மார்ச் 15-ம் தேதி, கோயிலை 3 நாட்களுக்குள் காலி செய்யுமாறு உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து கோயில் நிருவாகம் அறிவிப்பை பெற்றது.

கே.குமரேசன்

இருப்பினும், சுங்கை பெட்டாணி நகராட்சி மன்றம் (எம்.பி.எஸ்.பி) மற்றும் கோயில் நிருவாகத்தினருடன் நடந்த விவாதங்களுக்குப் பின், தாமான் முத்தியாராவில் அமைந்துள்ள அந்த நாகம்மாள் கோயில் இடிக்கப்படுவது இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திவைப்பை, கெடா மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரி கே.குமரேசன் உறுதிப்படுத்தினார்.

“கோயிலில் இருந்து புகார் வந்தவுடன், நான் அங்கு விரைந்தேன்.

“நானும் இரண்டு கோயில் பிரதிநிதிகளும் எம்.பி.எஸ்.பி அமலாக்க அதிகாரியுடன் கலந்துரையாடினோம்.

“விவாதங்களின் விளைவாக, கோயில் இடிக்கப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

மார்ச் 22-ம் தேதி, எம்.பி.எஸ்.பி, கோயில் நிருவாகம், நில உரிமையாளர், இந்திய சமூக ஆட்சிக்குழு உறுப்பினர் மற்றும் ஒற்றுமை துறை ஆட்சிக்குழு உறுப்பினர் இடையில் சந்திப்புக் கூட்டம் நடைபெறும் என்றும் குமரேசன் தெரிவித்தார்.

டாக்டர் சம்முகம் ரெங்கசாமி

முன்னதாக, புக்கிட் சிலம்பாவ் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சம்முகம் ரெங்கசாமி, எம்.பி.எஸ்.பி. முடிவுக்கு இந்துக்கள் வருத்தம் தெரிவித்ததாகவும், ஏன் இலக்கு வைத்து கோயில்கள் இடிக்கப்படுகின்றன என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

பாஸ், பி.என்.னின் ஒரு முக்கிய அங்கம்

“இது ஒரு சிறிய கோயில், 4-க்கு 5 மீட்டர்தான். நான் இன்று காலை அதைப் பார்வையிட்டேன்.

மார்ச் 18-க்குள், கோயில் அகற்றப்படாவிட்டால், மார்ச் 19 அன்று அமலாக்க இலாகா நடவடிக்கை எடுக்கும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

“எம்.பி.எஸ்.பி. தலைவர் சையத் கைரோல் அனுவார் சையத் அபிடினுக்கு நான் ஒரு கடிதம் எழுதியுள்ளேன், கோயில் உடைப்பை ஒத்திவைக்கும்படியும்,  அனைத்து தரப்பினரும் இந்த விஷயத்தை விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டேன்,” என்றார் அவர்.

நாகம்மாள் கோயில் கடந்த 15 ஆண்டுகளாக அங்கு இருப்பதாக சம்முகம் தெரிவித்தார்.

“சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, பினாங்கைச் சேர்ந்த ஒரு மேம்பாட்டாளர் சில குடியிருப்பாளர்களை இடமாற்றம் செய்து, அவர்களுக்காக இந்தச் சிறிய கோயிலைக் கட்டினார்.

“இந்தக் கோயில் சிறியது, பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறுவதில்லை, சாதாரண வழிபாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், பினாங்கு துணை முதல்வர் பி. இராமசாமி கோயில் இடிக்கப்படுவது – நடைமுறைப்படுத்தப்பட்டால் – கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

“கடந்த ஆண்டு, மாநிலத்தில் இரண்டு இந்து கோயில்கள் இடிக்கப்பட்டன. அலோர்ஸ்டாரில் ஒரு பாரம்பரியக் கோயில் மற்றும் சில மாதங்களுக்குப் பிறகு கூலிமில்.

“இந்து கோயில்களை, குறிப்பாக அரசு அல்லது தனியார் நிலத்தில் உள்ள கோயில்களை இடிக்க கெடா பாஸ் அரசாங்கம் ஒரு முறையான அணுகுமுறையைப் பின்பற்றுவதாகத் தெரிகிறது,” என்று அவர் கூறினார்.

கோயிலை இடிக்கும் மாநில அரசின் நடவடிக்கை, ஒரு தற்செயல் நிகழ்ச்சியோ  அல்லது உள்ளூர் அரசாங்கச் சட்டங்களுக்கு இணங்குவதை உறுதி செய்வதோ அல்ல என்று இராமசாமி கூறினார்.

மாறாக, இது கெடா மந்திரி பெசார் முஹம்மது சனுசி நோர் தலைமையின் தீவிரமும் சகிப்புத்தன்மை இல்லாமையின் விளைவாகும் என்று இராமசாமி கூறினார்.

“தைப்பூச விடுப்பை சிறிதும் குற்ற உணர்வின்றி, வருத்தமின்றி சனுசியால் இரத்து செய்ய முடிகிறது என்றால், முஸ்லிம் அல்லாதவர் வழிபாட்டுத் தலங்களின் சோகமான தலைவிதியைக் கற்பனை செய்து பாருங்கள்.

“தேசியக் கூட்டணியின் (பி.என்.) ஒரு முக்கிய அங்கமாக பாஸ் இருப்பதால், கெடாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் அதிகாரம் அதிகம் செய்ய முடியாது,” என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், நாகம்மாள் கோயிலின் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் எம்.பி.எஸ்.பி. அறிவிப்பு குறித்து தனது வருத்தத்தை தெரிவித்தார்.

“இந்தக் கோயில் நில உரிமையாளரால், ஒரு தனியார் இடத்தில் கட்டப்பட்டது. இதுவரை, இந்தக் கோயிலை அகற்றுமாறு நில உரிமையாளர் எங்களிடம் கேட்கவில்லை. எனவே, இந்தக் கோயிலை இடிக்க எம்.பி.எஸ்.பி.க்குத் தேவை என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கோயிலை அகற்றுமாறு, மூன்றாம் தரப்பு பொதுமக்களிடமிருந்து புகார் வந்ததே காரணம் என்று எம்.பி.எஸ்.பி. கூறுவது இந்த நடவடிக்கைக்குப் பொருந்தாது என்றும் அவர் கூறினார்.