முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், மந்தநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க, பிரதமர் முஹைதீன் யாசினின் அண்மைய உதவி தொகுப்பு போதுமானதாக இல்லை என்றார்.
RM20 பில்லியன் பொருளாதார “அதிகாரமளித்தல்” திட்ட அறிவிப்பு குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.
“2020-ஆம் ஆண்டின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (கே.டி.என்.கே.) 5.6 விழுக்காடு சுருங்கியுள்ள நிலையில், மலேசியாவை மந்தநிலையிலிருந்து வெளியேற்ற எப்படி RM11 பில்லியன் நிதியால் முடியும்,” என்று அவர் கேட்டார்.
பாகான் நாடாளுமன்ற உறுப்பினரான லிம், முன்னர் கோவிட் -19 தொற்றின் காரணமாக அறிவிக்கப்பட்ட பெரிய பொருளாதார தொகுதிகளே இத்தாக்குதல்களுக்கு எதிராகப் பயனற்றதாக இருந்தது என்றார்.
“கடந்த ஆண்டு RM305 பில்லியன் பராமரிப்பு பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பு மற்றும் RM322.5 பில்லியன் 2021 பட்ஜெட், அத்துடன் இந்த ஆண்டு ஜனவரியில் RM15 பில்லியன் ‘பெர்மாய்’ தூண்டுதல் தொகுப்பு ஆகியவற்றால் பொருளாதார மந்தநிலையைத் தடுக்க முடியவில்லை, அவை பயனற்றதாகவே காணப்பட்டன என்பதை முஹைதீன் மறந்துவிட்டதாகத் தெரிகிறது.
“வெளிப்படையாக, பெமெர்காசாவின் (Pemerkasa) RM11 பில்லியன் நிதி ஒதுக்கீடு பொருளாதாரத்தைப் புதுப்பிக்கப் போதுமானதாக இல்லை, நமக்கு தேவைப்படுவது RM45 பில்லியனின் பொருளாதார வினையூக்கியாகும்,” என்று அவர் கூறினார்.
உண்மையில், அந்த டிஏபி எம்.பி.யின் கூற்றுப்படி, தேசியக் கூட்டணி (பி.என்) அதன் பொருளாதார இலக்குகளை அடையவும் தவறிவிட்டது.
2020 வேலையின்மை விகிதம் 4.2 விழுக்காடாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 5.5 விழுக்காடாகவும், பட்ஜெட் பற்றாக்குறை 6 விழுக்காடாகவும் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சு கணித்துள்ளது.
இருப்பினும், வேலையின்மை இப்போது 4.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பொருளாதாரம் 5.6 விழுக்காடாக சுருங்கிவிட்டது, பட்ஜெட் பற்றாக்குறை 6.2 விழுக்காடாக வளர்ந்துள்ளது என்றார் லிம்.
“சிறிய முன்முயற்சி திட்டங்களின் பட்டியல் இருந்தாலும், கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட நெருக்கடியின் இறுதி வரை தொடர்ச்சியான உதவிகளுக்குப் பதிலாக, ஒரே ஒருமுறை உதவிதொகை வழங்கும் பழையத் திட்டமே இன்னும் பின்பற்றப்படுகிறது.
“வேலையிழந்தவர்கள் உட்பட, சமூக நல உதவி பெறுநர்களுக்கு மாதந்தோறும் RM1,000 உதவிதொகை, 150,000 வரைப்பட்டிகை (டேப்லெட்டு) மற்றும் மாணவர்களுக்கான மடிக்கணினிகள், ஈபிஎஃப் RM10,000 வரை திரும்பப் பெறுதல் மற்றும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துதலுக்கான தற்காலிகத் தடை நீக்கம் (T20தவிர) இவையெல்லாம் என்ன ஆனது?” என்று லிம் கேள்வி எழுப்பினார்.
அவரைப் பொறுத்தவரை, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் (பி.கே.பி) விதிகளை மீறும் ஒரு குடிமகன் அல்லது தனிநபருக்கு அரசாங்கம் விதித்த பெரிய அபராதங்களாலும் வாழ்க்கைநிலை இன்னும் மோசமடைந்துள்ளது.
“தனிநபர்களுக்கு ஒருமுறை RM500 உதவியும், சிறு வணிகங்களுக்கு ஒருமுறை RM3,000 மானியமும் கொடுத்துவிட்டு, தனிநபர்களுக்கு RM10,000 மற்றும் வணிகங்களுக்கு RM50,000 எனத் தண்டம் விதிக்கும்போது அதனால் என்ன பயன்?” என்று கேட்டார் அவர்.
“வலது கையால் சிறிது உதவி செய்வதும், பின்னர் இடது கையால் அதிகமாக எடுத்துக்கொள்வதும் மக்களின் நிதிச் சுமையைக் குறைக்க உதவாது,” என்று அவர் கூறினார்.
வேலையற்றவர்களுக்கு உதவுதல், புதிய வேலைகளை உருவாக்குதல், இருக்கும் வேலைகளைக் காப்பாற்றுதல், வணிக மூடல்களைத் தவிர்த்தல், வணிக வாடகைக்கு மானியம் வழங்குதல், கல்வி நெருக்கடியை நிவர்த்தி செய்தல் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வளங்களை உருவாக்குதல் போன்ற கூடுதல் பொருளாதாரத் தூண்டுதல் தொகுப்பை அரசாங்கம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.