நஜிப்பின் கேலிக்கு, கே.ஜே. பதில் : அவருக்கும் எனக்கும் தெரியும் அது காரணமல்ல என்று

தடுப்பூசியைப் பெறுவதற்கு, முனைமுகப் பணியாளர்களுக்கு வழிவிடுவது ஒரு குற்றமா என்று முன்னாள் பிரதமர் நஜிப் இரசாக் கேள்வி எழுப்பினார்.

மார்ச் 6-ஆம் தேதி, நிர்ணயிக்கப்பட்ட தனக்காக தடுப்பூசியை நஜிப் இரத்து செய்ததை வெளிப்படுத்திய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீனின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக நஜிப் இதனைத் தெரிவித்தார்.

“எனக்குத் தெரியவில்லை… மற்றவர்கள் கோவிட் -19 தடுப்பூசியைப் பெற, முனைமுகப் பணியாளர்களுக்கு வழிவிடலாம், ஆனால் நான் முடியாது.

“ஒருவேளை நான் முதலில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் போல,” என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் கூறினார்.

பெக்கான் டிஆர்பி ஹைகோம் பல்கலைக்கழக மண்டபத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி நியமனத்தை, அந்தப் பெக்கான் எம்.பி. இரத்து செய்ததாக கைரி கூறிய அறிக்கையின் சில பகுதிகளையும் அந்த பதிவோடு இணைத்திருந்தார்.

நஜிப் தனது முகநூலில் பதிவேற்றிய இடுகைக்குப் பதிலளித்த கைரி, நியமனம் செய்யப்பட்ட தேதியில் செல்லாததால், பிரிதொரு தேதியில் முன்னாள் பிரதமர் மீண்டும் ஆஜராவார் என்று நம்புவதாகக் கூறினார்.

“தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்புத் திட்டத்தை (PICK) வெற்றிகரமாகச் செயல்படுத்துவதை உறுதி செய்ய, டத்தோ ஶ்ரீ முகநூல் பதிவுகள் மூலம் எப்போதும் கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்கி வருவதற்காக அவருக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

“அதே நேரத்தில், குறிப்பாக பெக்கானில் உள்ள மக்களுக்குத் தடுப்பூசிகளைப் பதிவு செய்வதை ஊக்குவிக்க டத்தோ ஶ்ரீ உதவுவார் என்றும் நான் நம்புகிறேன், தற்போது, அங்கு 3,020 குடியிருப்பாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

“முகநூலில் மட்டும் எழுதவும் ஊக்குவிக்கவும் வேண்டாம், ஆனால் பதிவுசெய்ய ஊக்குவிக்கவும் உதவவும் அந்தப் பகுதியில் இறங்குங்கள்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், நஜிப்பின் பதிவுக்கு உடனடி எதிர்வினையாக, “எனக்கும் டத்தோ ஶ்ரீ-க்கும் தெரியும், அது காரணம் அல்ல என்று,” எனக் கைரி கருத்துகள் பிரிவில் எழுதினார்.