11 மாதங்களாக காலியாக இருக்கும், சிங்கப்பூர் தூதரக ஆணையரை விரைந்து நியமிக்குமாறு வெளியுறவு அமைச்சுக்கு வலியுறுத்தப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரக அலுவலகத்தில் நெரிசல் குறித்த அறிக்கையைத் தொடர்ந்து, ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் தான் ஹோங் பின் இதனைத் தெரிவித்தார்.
சிங்கப்பூரின் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியின்படி, மலேசியர்கள் தங்கள் கடப்பிதழ்களைப் புதுப்பிக்க ஐந்து மணி நேரம் வரை வரிசையில் நிற்க வேண்டியுள்ளது என்று கூறப்படுகிறது.
“சிங்கப்பூரில், கடந்த 11 மாதங்களாகக் காலியாக உள்ள மலேசியத் தூதர் பதவி தொடர்பில், வெளியுறவு அமைச்சின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். ஆணையர் அலுவலகத்தின் செயல்பாட்டைத் துரிதப்படுத்த, உடனடியாக ஒரு புதிய நியமனம்,” என்று தான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடப்பிதழ் புதுப்பித்தலுக்கு இயங்கலையில் விண்ணப்பிக்குமாறு தூதரக அலுவலகம் விண்ணப்பதாரர்களைக் கேட்டிருந்தாலும், இந்த முறை குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்குச் சாத்தியமில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்கள் தங்கள் கடப்பிதழைப் புதுப்பிக்க நேரடியாக அங்குச் செல்ல வேண்டும், அதே நேரத்தில், மலேசியத் தூதரகம் ஒரு நாளைக்கு 30 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒதுக்கீட்டை நிர்ணயித்துள்ளது.
நெரிசல் நிலைமை “குழப்பமான” சூழ்நிலையை உருவாக்குவதாக விவரிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் குறைந்தது 500,000 மலேசியர்கள் வேலை செய்கிறார்கள், அதில் அதிகமானோர் ஜொகூரைச் சேர்ந்தவர்கள் என்றார் தான்.
சிங்கப்பூருக்காக, தற்போது செயலில் இருக்கும் மலேசியத் தூதர், முகமது ராட்ஸி ஜமாலுதீன், அது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார் என்றும் அந்த சிங்கப்பூர் செய்தித்தாள் கூறியுள்ளது.
முன்னதாக, வெளியுறவு அமைச்சர் ஹிசாம்முடினை இந்த விஷயத்தைத் தெளிவுபடுத்துமாறு பக்காத்தான் ஹராப்பான் வலியுறுத்தியது.