கையூட்டு வாங்கியது மற்றும் குற்றங்கள் செய்த லாரி ஓட்டுநர்களைப் பாதுகாத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு உதவ, பெர்லிஸ் சாலை போக்குவரத்துத் துறையின் (ஜே.பி.ஜே.) துணை இயக்குநர் இரண்டு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டார்.
கங்கார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், இன்று தடுத்து வைப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெர்லிஸ் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) விண்ணப்பத்திற்கு, மாஜிஸ்திரேட் கமலிசா ஸாய்ன் அனுமதி அளித்தார்.
கேபி 44 கிரேட் கொண்ட, அந்த 41 வயது துணை இயக்குநர், நேற்று மாலை 4.40 மணிக்குப் பெர்லிஸ் எம்ஏசிசி அலுவலகத்தில் சாட்சியமளித்த பின்னர் கைது செய்யப்பட்டார் என வட்டாரம் ஒன்று கூறியது.
பெர்லிஸில் 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில், லாரி ஆபரேட்டர்களிடமிருந்து இடைத்தரகர்கள் மூலம் RM88,000 தொகையைக் கையூட்டாக வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்களில், ஐந்தாவது நபர் ஆவார்.
இந்த வழக்கு எம்ஏசிசி சட்டம் 2009-இன், பிரிவு 17 (a)-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
– பெர்னாமா