இன்று 1,671 புதிய நோய்த்தொற்றுகள், சிலாங்கூர், பினாங்கு, சபாவில் பாதிப்புகள் அதிகரித்தன

கோவிட் 19 | நாட்டில் இன்று நண்பகல் நிலவரப்படி, 1,671 கோவிட் -19 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. பினாங்கு, சிலாங்கூர் மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் புதிய தொற்றுகள் அதிகரித்துள்ளன.

சிலாங்கூரில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை, நேற்றுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சபாவில், மார்ச் 1 முதல் மூன்று இலக்கங்களுக்கு எண்ணிக்கை திரும்பியுள்ளது.

கோவிட் -19 நோய்த்தொற்றுகளின் மூன்றாவது அலை தாக்கியதிலிருந்து, பினாங்கில் புதிய நேர்வுகளின் எண்ணிக்கை, 16 நாட்களில் மிக அதிகமாக இருந்தது, இன்று இரண்டாவது அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களை, தனது கீச்சகம் மூலம் சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா பகிர்ந்துள்ளார்.

இதற்கிடையில் இன்று, 1,585 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அவசரப் பிரிவில் 151 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 64 பேருக்குச் சுவாசக் கருவியின் உதவி தேவைப்படுகிறது.

மேலும் இன்று 4 மரணங்கள் சம்பவித்து, நாட்டில் பலியானவர் எண்ணிக்கையை 1,229-ஆக உயர்த்தியுள்ளது.

புத்ராஜெயா மற்றும் பெர்லிஸில் இன்று புதியத் தொற்றுகள் பதிவாகவில்லை.

மாநிலங்கள் வாரியாகப் புதியத் தொற்றின் எண்ணிக்கை பின்வருமாறு :-

சிலாங்கூர் (652), பினாங்கு (328), சரவாக் (154), ஜொகூர் (130), சபா (102), கோலாலம்பூர் (78), கிளந்தான் (63),  கெடா (46),  பேராக் (37), திரெங்கானு (32), நெகிரி செம்பிலான் (25), மலாக்கா (18), பஹாங் (3), லாபுவான் (3).