மனோன்மணி மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டு, மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கண்டனம்

நாடறிந்த கல்வியாளரும் மாணவர்களால் போற்றப்படும் பேராசிரியருமான முனைவர் மனோன்மணி மீது, இந்து ஆகம அணி இயக்கத்தைச் சேர்ந்த அருண் துரைசாமி, அண்மையில் தொடுத்திருக்கும் அடிப்படையற்ற காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை மலேசியத் தமிழர் தேசியப் பேரவை கண்டிக்கிறது.

அருண் துரைசாமியும் இந்து ஆகம அணியும் அண்மையக் காலமாக அது சார்ந்த பணிகளைக் கவனிக்காமல் தமிழரின் வரையறைகளைக் கங்காணித்துவம் செய்ய முற்படுவதை நாம் கவனித்து வருகிறோம். அந்த வரிசையில், இப்போது இவர்களது தாக்குதல்கள் முனைவர் அவர்களை நோக்கி உள்ளது.

அருண் துரைசாமி, ஒரு காணொளியில் ஒரு மொட்டைக் கடிதத்தை மேற்கோளாக காட்டி, முனைவர் அவர்கள் தமிழ் படிக்கும் மாணவர்களுக்குத் தூயத் தமிழ் பெயரைச் சூட்டி அவர்களை இறைமறுப்பாளர்களாகவும் இந்து மதத்துக்கு எதிரானவர்களாகவும் உருமாற்றி வருகிறார் என்ற விந்தையான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

பெயர் மனிதனின் அடிப்படையான அடையாளம். அது இனம், மொழி சார்ந்து அமையும் போது ஒரு நபருக்கு  அது தொடர்பான விருப்பத்தையும் ஆர்வத்தையும், மேலும் அதன் வேர் பிடித்து செல்ல ஒரு தூண்டுதலையும் ஏற்படுத்தும். அதனால்தான், தம் இனம் மொழி சார்ந்த பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்ட வலியுறுத்துகிறோம். நம் நாட்டிலேயே இளம் பெற்றோர் நற்றமிழ் பெயர்களைத் தேடி சூட்டுவதையும் காண்கிறோம்.

மொழியியல் புலங்களில் மாணவர்களுக்குள் ஓர் உளவியல் ஆர்வத்தை ஏற்படுத்த, ஆசிரியர்கள் கற்றுத் தரும் மொழி சார்ந்த பெயரைச் சூட்டுவதைப் பார்க்கின்றோம். எடுத்துக்காட்டாக, சப்பானிய மொழி வகுப்பில் மாணவர்கள் சப்பானியப் பெயரை இட்டுக்கொள்வதைப் பார்க்கின்றோம். இதன் அடிப்படையில் தான், தமிழ் பேராசிரியாரான முனைவர் அவர்களும் தம் மாணவர்களுக்கு நல்ல தமிழ் பெயர்களை வழங்கினார். மாணவர்களும் மகிழ்வோடு ஏற்றிருக்கின்றனர். இது கற்றல் கற்பித்தலில் ஓர் அணுகுமுறை.

இந்த நோக்கத்தைத் திரித்து, ஏதோ சிந்தனை திணிப்பு நடப்பது போன்ற தோற்றத்தை அருண் துரைசாமி கொடுப்பது அறிவுக்குப் புறம்பானது, நச்சுத்தன்மையானது.

முனைவர் அவர்கள் மாணவர்கள் போற்றும் ஆசிரியராக அறியப்படுபவர். அது மட்டுமல்லாமல், தமிழ் சார்ந்த நூல்களையும் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

தமிழர் தேசியப் பேரவை, முனைவர் மனோன்மணி அவர்களின் பணியைப் போற்றுவதோடு, ஊக்கப்படுத்துகிறது. அருண் துரைசாமி போன்ற தீவிர சிந்தனை கொண்டவர்களின் தாக்குதல்களை எதிர்நோக்க அவருக்கு அரணாக நிற்கும். அதே வேளையில், கல்வி அமைச்சு உட்பட இதர நிறுவனங்களுக்கும் இது தொடர்பாக கடிதம் அனுப்பும் என்று தமிழர் தேசியப் பேரவையின் துணைத் தலைவரும் வழக்கறிஞருமான இரா பாலமுரளி தெரிவித்தார்.