‘தம்பி’ என்பதற்கு டிபிபி-யின் வரையறை என்ன? – இந்திய சமூக ஆர்வலர் விமர்சனம்

மலேசியாவில் உள்ள இந்தியச் சமூகத்தை அவமதித்ததாகக் கூறப்படும் டேவான் பஹாசா டான் புஸ்தாக்கா (டிபிபி) திணைக்களத்தின் இணையதளத்தில், ‘தம்பி’ என்ற வார்த்தையின் வரையறை குறித்து ஓர் இந்தியச் சமூக ஆர்வலர் இன்று டிபிபி-யை விமர்சித்தார்.

‘தம்பி’ என்ற வார்த்தைக்கு, “எங்களை விட இளையக் கெல்லிங் ஆட்களுக்கான அழைப்பு” என்று டிபிபி வரையறுத்துள்ளது.

“ஒட்டுமொத்த இந்திய சமூகத்தையும் அவமதிக்கும் வகையிலான இந்த நடவடிக்கையை நான் கண்டிக்கிறேன்.

“இது ஏற்றுக்கொள்ள முடியாதது, இது ஒரு நேரடி அவமானம்,” என்று எஸ் சங்கர் கணேஷ் கூறினார்.

 

முன்னதாக, டிபிபி வலைத்தளத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் மலேசியாகினியுடன் அவர் பகிர்ந்து கொண்டார்.

பதிவைப் பொறுத்தவரை, இந்தியச் சமூகத்தைக் குறிக்க ‘கெல்லிங்’ என்ற சொல் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இருப்பினும், இந்திய சமூகம் இந்த வார்த்தையை அவமதிப்பாகக் கருதுகிறது.

இதற்கிடையில், ‘தம்பி’ என்பது ‘இளையச் சகோதரர்’ என்று பொருள்படும் ஒரு தமிழ் சொல்.

இந்தியர்களை நட்பான முறையில் அழைக்க, மலாய் சமூகம் பயன்படுத்தும் ஒரு சொல் ‘தம்பி’ ஆகும்.

இதற்கிடையில், டிபிபி மன்னிப்பு கோர வேண்டுமென ஒரு நோட்டிசை அனுப்பியதாக ஷங்கர் கூறினார்.

“அவர்கள் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், மேலும் கெல்லிங் என்ற வார்த்தையை அவர்களின் இணையதளங்களிலிருந்து அகற்ற வேண்டும்.

“அரசாங்கம் இந்த விஷயத்தை ஆராய்ந்து, மலேசியாவில் எந்தவொரு இனத்திற்கும் எதிராக அவமதிக்கும் சொற்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அனைத்து அரசுத் துறைகள் மற்றும் பகுதி அரசு துறைகளையும் எச்சரிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

டிபிபி தலைமை இயக்குனர், அபாங் சல்லேஹுடின் அபாங் ஷோகரனைத் தொடர்பு கொண்டபோது, ​​இந்த விவகாரத்தை ஆராய்வேன் என்று கூறினார்.

“நான் முழுமையாக ஆராய்ந்து, பின்னர் கருத்து தெரிவிப்பேன்,” என்று அவர் ஒரு சுருக்கமான செய்தியில் கூறினார்.